சங்க இலக்கியம் - I அலகு - 4 பரிபாடல்

                        பரிபாடல் 

செவ்வேள் பாடல்  -  1
புலவர் முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் வேண்டாமல், அன்பும் அறனும் வேண்டுகிறார். முருகப்பெருமானின் பிறப்பு-வளர்ப்பு, தோற்றம் முதலான கதைச் செய்திகள் இதில் கூறப்படுகின்றன.

👉செவ்வேள் என்னும் முருகப்பெருமான்,
கடல்நிலமே துகளாகும்படிக் கடலுக்குள் புகுந்தவன்.மயிலில் ஏறிச் செல்பவன்.
👉போரிட்டு, தீப்பந்தம் விட்டெறிந்து, போரால் துன்புறும் சூரபன்மனை வெட்டி வீழ்த்தியவன்.
👉வெற்றி வீரர்களுடன் சேர்ந்துகொண்டு உயிரினங்களைக் கொன்று தின்ற மாய அரக்கர்களை எச்சமிச்சம் இல்லாமல் கொன்ற வேலை உடையவன்.

👉நாவலந்தண்பொழில் எனப்படும் தென்னகம், வடநாடு இரண்டுக்கும் இடையே இருந்த குருகுப் பறவையின் பெயர் கொண்ட பெரிய மலையை கிரவுஞ்ச-கிரியை உடைந்து மலையை வழியனுப்பிவைத்த ஆறு இளந்தலைகள் கொண்டவன்.
👉ஆறு தலைகளுக்கும் பன்னிரண்டு தோள் கொண்டவன்.
👉பகலவன் போல ஒளி மிக்கவன்.
தாமரையில் பிறந்தவன்.அழிக்கும் கடவுளின் மகன்.
👉செம்மைக் கொடையாளி.
👉பேய்கள் விழாக் கொண்டாடி ‘சால்புடையவன், தலைவன்’ என்று போற்றி வெறியாட்டம் ஆடும் பெருந்தகை. 

👉இவை உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல.
👉முருகா!
நீ எல்லை இல்லாதவன்.
👉இந்த உலகமும் நீ.
ஆதலின் உன்னைச் சிறப்பித்துப் போற்றுவதால் உனக்குச் சிறப்பு வரப்போவதில்லை.
👉சிறப்புக்கும் சிறப்பு நீ.
👉பிறப்பில் தாழ்ந்தவன் நீ.
என்றாலும், எல்லாரும் நின் ஆற்றலுக்கு உட்பட்டவர்கள்.

👉சிவன் முப்புரத்தை அழித்தான்.
அப்போது,
👉பிரமன் ஆதி அந்தணன் தேர் ஓட்டினான்.
👉வேதங்கள் குதிரை.
👉நிலவுலகம் தேர்.
👉நாகம் வில்லிலுள்ள நாண்.
👉மேரு மலை வில்.
👉அழலும் தீ அம்பு.
👉ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் தீப்பற்றி எரியச்செய்தவன்.இந்தச் சினம் தணிய, தேவர்கள் வேள்வி செய்தனர்.
👉அவர்கள் அளித்த வேள்விப் பாகத்தை வாங்கி உண்டவன்.
👉அவன் இளங்கண் ஒன்றும் கொண்ட பார்ப்பான் (சிவன்). 

👉சிவன் உமையுடன் கூடிக் காமப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தான்.
👉அது புணர்ச்சி இல்லாத புணர்ச்சி.
👉அப்போது அவன் நெற்றிக் கண் ஒரு வரம் தந்தது. 

👉அந்த வரம் ஒரு கருவைத் தந்தது,
பெற்ற கருவை பிரமன் (விண்ணோர் வேள்வி முதல்வன்) இந்திரனுக்கு (விரிகதிர் மணிப்பூண் அணிந்தவனுக்கு) அளித்தான்.
👉இந்திரன் கைகளால் அதனை தாங்க முடியவில்லை.
👉எனவே இந்திரன் தன் கையிலிருந்த குடாரிப் (கோடாரி) படையால் அடித்து அதன் உருவத்தைச் சிதைத்தான்.
👉அது உலகம் ஏழுக்கும் அருள் புரியும் ஏழு பிண்டங்களாக (விலங்கு) மாறியது.

👉ஏழு மாதவ முனிவர்கள் சிதைந்த கருவைப் பெற்றுக்கொண்டனர்.
👉அவர்கள் முதிர்ந்து தேய்ந்து தழுதழுத்த உடம்பினை (கழிந்த சேய் யாக்கை நொசிப்பு) உடையவர்கள்.
👉அவர்கள் அந்தத் தசைப் பிண்டங்களைத் தீ வேள்வியில் இட்டு எடுத்து, தம் மனைவியரிடம் தந்து உண்ணுமாறு வேண்டினர்.

👉ஏழு கன்னிமாருள் வடமீனாக விளங்கும் அருந்ததி உண்ணவில்லை.
ஏனைய ஆறு பேரும் உண்டனர்.

👉ஆறு கன்னிமார் முருகனை வளர்த்தனர்
ஆறு பேரும் கருவுற்றனர்.
👉ஆறு பேரும் குழந்தை பெற்றனர்.
இமயமலை ‘நீலப்பைஞ்சுனை’யில் உள்ள ஆறு தாமரைப் பூக்களில் பெற்றனர்.

👉குழந்தைகளைக் கண்டு சினம் கொண்ட இந்திரன் தன் வச்சிரப் படையால் தாக்கினான்.
👉சிதைந்த ஆறு குழந்தைகளும் ஒன்று திரண்டு ஓருருவம் பெற்றது.
👉அப்படி உருவாகிய வெற்றிக் குழந்தை நீ.
👉இப்படி நிறைவடையாத உடம்பில் அமர்ந்துகொண்டு நீ விளையாடிய போரில் இந்திரன் தோற்றுப்போனான்.

👉செவ்வேள், ஆறுமுகன் கதை
உன் வெற்றியைப் பாராட்டி, அனல்-கடவுள் தன் உடம்பிலிருந்து பிரித்து வாரணம் என்னும் சேவலைக் கொடுத்தான். (எரியும் தீ போல் சிறகுகளைக் கொண்டது சேவல்). 👉இந்திரன் (வானத்துச் செல்வன்) தன் உடம்பிலிருந்து பிரித்து மயிலைத் தந்தான். 👉(ஆயிரம் கண் கொண்ட மேனி போல் மயில்)எமன் (ஞமன்) தன் உடம்பிலிருந்து பிரித்து வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தான்.
👉அவ்வாறே பிறரும் அவரவர் உடம்பிலிருந்து பிரித்து விரும்பியதைத் தந்தனர்.
👉இதனால்
1. ஆட்டுக்குட்டி,
2. மயில்,
3. சேவல்,
4. வரிந்து கட்டிய வில்,
5. மரம்,
6. வாள்,
7. ஈட்டி,
8. குடாரி (கோடாரி),
9. கணிச்சி (மூவிலை-வேல்),
10. தீச்சட்டி,
11. மாலை,
12. மணி
என்று 12 கைகளில் 12 விருதுப் பொருள்களைக் கொண்டுள்ளாய்.

தாமரை மலரில் கொட்டை
👉தாமரைக் கொட்டையில் இருந்த குழந்தைப் பருவத்திலேயே இந்திரன் (துறக்கத்து அமரர் செல்வன்) புகழ் வரம்பை நீ கடந்தவன்.   

👉உன் குணத்தைச் சிலர் அறம் எனக் கொண்டனர்.
👉நிலைபெற்ற (தடுமாறாத) குணமுடைய மாதவர் உன்னை வணங்கினர்.
👉இவர்கள் உன் திருவடி நிழலை அடைந்தனர்.
· 👉அழிக்கும் தீய நெஞ்சில் நீடித்த சினமுடையவர்களும், அறம் சேராமல் சீர்மை இல்லாமல் இருப்பவர்களும், அழிதவம் செய்வர்களும், மறுபிறப்பு இல்லை என்று சொல்லும் மடையர்களும் உன் நிழலை அடையமாட்டார்கள்.  

👉உன் திருவடி நிழலில் சிலர் சேர்வர், சிலர் சேரமாட்டார்கள்.
👉ஆதலால் நான் உன்னை வேண்டுவதெல்லாம் பொன்னோ, பொருளோ, போகமோ அல்ல.
👉உன் அருள், அன்பு, அறம் ஆகிய மூன்றையும் தருக.
👉கடம்பமாலை அணிந்தவனே! தருக.

செவ்வேள்
கடவுள் வாழ்த்து
பாட்டு - கடுவன் இளவெயினனார்
இசை - கண்ணனாகனார்
பண் - பாலையாழ்

பாடல் வரிகள் 👇👇

1
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய 5
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
2
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! 10
'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள்,
வேலன் ஏத்தும் வெறியும் உளவே: 15
3
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்:
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும், 20
ஏனோர் நின் வலத்தினதே:
4
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
5
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, 30
6
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் அருள: 35
7
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி 40
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்
8
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: 45
9
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
10
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50
11
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
12
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
13
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,தாமரை
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
14
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். 70
15
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
அழி தவப் படிவத்து அயரியோரும், 75
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்:
16
அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் 80
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! 


செவ்வேள்  பாடல்  - 2
கூடல் எனப்பட்ட மதுரையின் சிறப்பினைக் கூறுவது இந்தப் பாடல்.
சிறப்பு மிக்க மதுரை என்னும் ஊர் திருமால் வயிற்றில் இருக்கும் கொப்பூழ்த் தாமரை போன்றது. அந்தப் பூவின் இதழ்கள் போன்றவை அதன் தெருக்கள். இதழின் நடுவே இருக்கும் பொகுட்டு போன்றது சொக்கநாதர் கோயில். பூவிலிருக்கும் மகரந்தத் தாது போன்றவர் அங்கு வாழும் தமிழ்க்குடி மக்கள். இவ்வூருக்கு வந்து பரிசில் பெற்றுச் செல்பவர்கள் தாமரையில் தேன் உண்ணும் பறவைகள் போன்றவர்கள். பூவில் பிறந்தவன் பிரமன். பிரமன் நாவில் பிறந்தவை நான்மறை வேதங்கள். இந்த வேதம் ஓதும் ஒலியைக் கேட்டு மதுரை மக்கள் துயில் எழுவர். சேலன் வஞ்சியும், சோழன் கோழியும் (உறையூரும்) போல கோழி கூவித் துயிலெழ மாட்டார்கள்.

பாடல் வரிகள் 👇👇
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்; 5
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக் 10
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே


வையை பாடல் - 1
👉வையை ஆற்றில் வெள்ளம் வந்தது.
மழை பொழிந்தது. கடலில் நீரை முகந்து சென்ற மேகம் உரசும்போது, தன்னிடமுள்ள நீர் தளும்பித் தாங்கமாட்டாமல் மழையாகப் பொழிந்தது.
புனல் நிலம் மறைவது போல ஓடியது. மலையில் வாழ்வன கலங்கும்படியும், மயில் அகவிக் கூவும்படியும் ஒடியது. 
மலையின் மாசுகளைக் கழுவிக்கொண்டு அருவியாக இறங்கியது. மலையில் ஆங்காங்கே நீர் வடிந்தது.
கவிதை  குறைவின்றி நூல் தேர்ந்த புலவர்களின் புலமை நாவில் கவிதை பிறக்குமாறு புனல் பரந்து பாய்ந்தது.
தொழில் வினை பெருகுமாறு புனல் பாய்ந்தது.

புகை, பூ, படையல், விளக்கொளி என்றெல்லாம் பலவற்றை ஏந்திக்கொண்டு வந்து மணமக்களை விழாக் கொண்டாடிக் கூட்டுவிப்பது போல வையைப் புனலை மக்கள் வரவேற்றனர். 

வையைக் கரை உடைந்தது என்னும் பறைமுழக்கம் ஒலித்தது
ஒப்பனை வையைப் புனலை வரவேற்கச் செல்வதற்காக, தோளில், ஆண்கள் தொடியும், பெண்கள் வளையலும் அணிந்துகொண்டனர்.
மார்பில் ஆண்கள் கொடியும், பெண்கள் வயிரக்கோவை மாலையையும் அணிந்துகொண்டனர்.
இருபாலாரும் முத்துமாலை அணிந்துகொண்டனர்.
மகளிர் நகங்களிலும், இதழ்களிலும் செம்பஞ்சுக் குழம்பை அப்பிக்கொண்டனர்.
மார்பில் வண்டல்-சாந்து பூசிக்கொண்டனர்.
கண்புருவ இலைகளிலும், தலைமயிரிலும் ஈரச்சாந்து எண்ணெய் நிழலாடச் [நிழத்தச்] செய்தனர்.
பெண்ணின் முலை, ஆணின் மார்பு இரண்டும் முயங்குவதற்காக இந்த ஒப்பனை.
இப்படி ஒப்பனை செய்துகொண்டவர்களின் ஒன்றுபட்ட உள்ளத்தில் இருக்கும் ஆணின் நிறையுடைமையும், பெண்ணின் நாணமும் உடைந்து பாய்வது போல, வையை வெள்ளம் தன் கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.
ஊரார் பேச்சு வையைக்கரை உடைந்து விடும் என்று பறையொலி கேட்பது போல் ஊரே பேசிக்கொண்டது.

உண்மையில் கரை உடையவில்லை. [அன்று] ஆண் யானைகள் போர்க் கோலத்துடன் சென்றன.
பெண் யானைகள் நீராடும் கோலத்துடன் சென்றன.
இளையரும், இனியரும் (இனிமையானவர் கள்) ஒப்பணை அணி, நீராடுவதற்குரிய அணி என்னும் இரண்டு அணிகலன் களையும் (ஈரணி) கொண்டு சென்றனர்.
வேகம் தணிந்து ஓடிய புனலில் புனலாட்டுப் போர் நிகழ்ந்தது.
விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.மாலை அணிந்துகொண்டனர்.
நீரைப் பீச்சி விளையாடும் கருவிகளை வைத்திருந்தனர்.
சிலர் புனல் செல்லும் போக்கிலேயே சென்று விளையாடினர்.யானைமீது சென்றனர். குதிரைமீது சென்றனர். சிவிறி கொண்டு நீரைப் பீச்சினர். கொம்புகளிலி ருந்து மணநீரை வீசினர். வெண்ணிறக் கிடைக்கட்டையைத் தேராக்கிக்கொண்டு அதன்மீது ஏறி மிதந்து சென்றனர். சாரிகையாகச் (வரிசையாகச்) செல்லாமல் தாறுமாறாகச் சென்றனர். 
சிலர் தடையின்றி ஏதாவது உண்டுகொண்டி ருந்தனர். [உண்டிகை] ஒரு வழியில் [இயவு] இடையூறு வரும்போது வழியை மாற்றிக்கொண்டு சென்றனர். 
தெருச்சேரி இளைஞர் சென்று நிலை கொள்ள முடியாமல் நீந்திக்கொண்டே இருந்தனர். 
வலிமையற்றவர் துறைக்கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். வலிமை உடையோர் புனலில் விளையாடினர். பருகுநீர் [சாறு], பாயசவகை [சேறு], நெய், மலர் முதலானவை சிந்தி வையை மணம் வீசியது.

இப்படி நாறும் நீரின் வேறுபாடு கண்டு அந்தணர் நீராட முடியாதே என்று கலங்கினர். 
புனலாடித் திளைத்த பூரிய மாக்கள் இட்ட சூடிய பூ, ஆண்களின் தார்மாலை, பெண்களின் கோதைமாலை, வெள்ளம் அடித்துக்கொண்டு வந்த வேர், தூர் (புதர்), காய், கிழங்கு, உண்ணும்போது சிந்திய நறவக்கள் போன்றவை கலந்து புனலே வேறுபட்டுப் பாய்ந்தது.

மலையருவி நீர், மரக்கிளைகளில் [வாது] மோதி ஆட்டியது. கரை புரண்டு பாயும் அருவி வாய்க்காலைப் பாராட்டிப் பாய்ந்தது. இரவில் புணர்ந்தவர் முலைமேல் கிடப்பது போல் இந்த நீரோட்டமானது குன்றத்தில் கிடந்தது. 
பூந்தாரான் குன்றில் தோன்றியது. கூடாமல் ஊடி உரையாடிக்கொண்டிருப்பவர் போல ஊரில் ஒருபுறம் ஒதுங்கி ஓடியது. நீர்ப்படை யால் [சலப்படை] இரவில் தாக்கியது.
 இவற்றையெல்லாம் புலப்படும்படிச் சொன்னால் நில-விரிவு போல் விரியும். இது தமிழ்வையை ஆற்றின் திண்ணம் புனல் (குளிர்நீர்) ஆயிற்றே!

விருந்து
அழைக்காத வந்த விருந்தினரைத் திருப்பி அனுப்புதல், தழைக்கும் தளிரைக் கிள்ளி எறிவது போன்றது. முன்பெல்லாம் விருந்து கண்டு உவந்து, பணிந்து நெஞ்சம் நெகிழும் பண்புடைய நீ இப்போது விருந்து கண்டு துவள்கிறாயே, ஏன்?
களவு
காதலியைப் பெறும் உன் களவொழுக்கம் வெற்றி பெறும். உன் மார்விலுள்ள மாலை வாடும்படிக் கொய்யும் உன் காதலி உனக்கு வாய்ப்பாள். நீ தழையாடையைக் கையில் பற்றிக்கொண்டு அவளை அழகுபடுத்திய செயல் மீண்டும் வாய்க்காதா? நீயே சொல். 

ஒருத்தி சொல்கிறாள்.
நீயே புனைந்துகொண்ட (கட்டிக்கொண்ட) புணைமேல் (தெப்பத்தின்மேல்) நீ ஏறினாய். அது தாழ்ந்துவிட்டது. பரத்தை சாய்ந்தாள் (உள்ளுறை). தளிர் நீர் தாக்கித் துவண்டது. உன் மனைவி துவண்டாள் (உள்ளுறை). முருகன் குன்றத்திலிருந்து (திருப்பரங் குன்றம்) அன்றோ வையை வருகிறது. அக்காலத்தில் வையை திருப்பரங்குன்றம் வழியாகப் பாய்ந்தது. இப்போது விலகி ஓடுகிறது.

மற்றொருத்தி அவளை வழிமொழிகிறாள்.
ஆம் ஆம். அப்படிச் சொல்வது பருத்த மானது. காதலில் தோன்றிய காமம் அல்லவா அது. ஒருபக்கமாவேநில்என்றால்  நிற்குமா? திடீரென [ஒல்லை]ச்சுருங்குவதும் பெருக்கெடுப்பதும்[ஆக்கமும்] வையை ஆற்றுக்கு இயல்பு. தலைவன் சூள்உரைத்தல் (சத்தியம் செய்யதல்) இயல்பு. இது பிழைதான். இந்தப் பொய்ச் சத்தியத்தையே நீ பெற்றிருக்கிறாய்.

வையை ஆற்றின் வயம் (இயல்பு)
தன் ஊர் அருகில் இருப்பவர்கள் அம்பியில் ஏறி நீர் வழியாகவே இந்தப் புனலாட்டு விழாவுக்கு வருவர். குருகுப்பறவைகள் வையையில் இரையைத் தேடிக்கொண்டு ருக்கும். வேனில் காலத்தில் மழைபொழிய வெள்ளப்பெருக்கு வரும். இவை வையை ஆற்றின் இயல்பு.
12
இன்னொருத்தி கூறல்.
ஆற்று வெள்ளத்தில் மிதவைமரம் செல்வது போல இரவெல்லாம் அவன் மார்பில் கிடந்தாய். கண்ணில் பனிமல்கக் கிடந்தாய். வையை உடைப்பு அடைத்த இடத்தில் நீர் கசிவது போல உனக்கு இப்போதும் கண்ணீர் வருகிறது. அவன் வந்துவிடு வான். வெதும்பும் செஞ்சோடு காத்திரு.
13
பரத்தை ஒருத்தி கூறுகிறாள்.
நல்லாளாகிய மனைவி கரையில் நின்று கொண்டிருக்கிறாள். நான் வையைத் தடத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். அலையில் மூழ்கினேன். எழுந்தேன். என்னைக் காப்பாற்ற அவன் என்மேல் விழுந்தான். அவனை நான் பற்றிக் கொள்ளா முன் அவனை மற்றொருத்தி தன் கழுத்து மாலையால் வளைத்துக் கொண்டாள். அவள் யாரோ தெரியவில்லை. வையையே! உணக்குத் தெரியும். இப்படி ஓர் ஆறு உண்டோ?  
14
அவன் சொல்கிறான்.
வையை ஆறு என்று என்னைக் கூறாதீர்கள்.திருப்பரங்குன்றத்தின் மேல் சத்தியம் செய்கிறேன்.
15
அவன் மனைவி ஊடலைத் தணிக்கச் சொல்கிறான்.
சினம் கொள்ளாதே. உன் கண் சிவந்திருப் பதைக் கண்டு நான் அஞ்சுகிறேன். ஊடலின் உச்சத்திலிருந்து [துனி] நீங்கி நீராடத் தொடங்கு. துனி காம-இன்பம் கெட்டுப்போகும். நீ நல்ல மகள் அல்லவா?
16
அவன் கெஞ்சசுகிறான்.
வேதனையை [அல்லா] நெஞ்சில் பூட்டி வைத்துக்கொண்டு காய்ந்து போகாதே. வேதனையோடு இரவெல்லாம் நீந்தாதே. அது பிழையாகும். வேறி இல்லத்தில் உள்ளவரெல்லாம் மகிழ்ச்சியில் ஆடுகின் னர். நான் உன்னிடம் இரக்கின்றேன். நீ பரந்து பராரியாகத் துன்புறுகின்றாய். நீ சமத்தாயிற்றே! [வல்லவர் ஆயிற்றே] நீ உன் ஊடலை உணர்ந்து, கூடல் தருக.
17
வையையில் விளையாடிக் களிப்பர். குளிப்பர். காமக் கொடி படர்ந்தேறக் கொளுக்கொம்பாய் இருப்பர். மகளிர்க்கு இன்பம் வழங்குவர். மகளிர் துனி கொண்டு ஊடுவர். ஆங்காங்கு விளையாடுவர். ஆடுவார் நெஞ்சில் மலர்ந்திருக்கும் காம-மலர் வாடாமல் இருக்க வேண்டும். வையையே! பாப்பாற்றுவது பொறுப்பு.

வையை பாடல் - 2
வையையில் வந்த புனலை மக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது. புனலாடிய ஆண்களும், பெண்களும் எப்படியெல்லாம் துய்த்தனர் என்று விளக்கும்போது ஊடல், கூடல் தொடர்பான செய்திகள் வருகின்றன. அவற்றுள் சில கடியத் தக்கனவாகவும் உள்ளன.
1
மலையிலிருந்து அருவி கொட்டியது.
அலை மோதும் குளிந்த கடலில் செவ்விய முறையில் நீரை முகந்துகொண்டு மேலே சென்ற மேகம், இடி முழங்கி, நீரைத் தாங்கிக்கொண்டு செல்லமாட்டாமல், கரை உடைந்த குளம் போல, வானத்து வயிறு கிழியும்படி மழையாகப் பொழிந்து கொட்டியது. 
2
தென்னவன் படை செல்வது போல வையையில் வெள்ளம் வந்தது.
பாண்டியன் படை இரவின் இருளையும் பகலாக்கிக்கொண்டு செல்லும்.
இடம் கொள்ளாதது போலச் செல்லும்.
வெற்றி முரசை முழக்கிக்கொண்டு செல்லும். அந்தப் படை செல்வது போல புனல்வெள்ளம் பெருகிற்று.அதனால் நன்மை பெருகிற்று. நாட்டில் அழகு பெருகிற்று. வயல்வளம் பெருகிற்று.
3
மரங்களின் வேரைப் பறித்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்தது.குளிர்ந்த சோலையி லுள்ள நரந்தம்புல் சாயும்படிப் பாய்ந்தது.
வேங்கைப் பூக்கள் உதிர்ந்தன.காற்றடித்துக் கலங்கும் மாமர வேரைப் பறித்தது.
குழிகளை நிரப்பிக்கொண்டு பாய்ந்தது.  
4
புதுமணதஉ ழவர்கள் மகிழ்ந்தனர்.
ஆடத்தெரியாதவள் முழவு முழக்கத்துக்கு ஏற்ப ஆடுவது போலவும், கணவனோடு ஊடல் கொள்ளத் தெரியாதவள் சிரிப்பது போலவும் பாய்ந்தது.தடைகளைத் தீர்த்துக் கொண்டு பாய்ந்தது. மணச்சாந்து கலக்கத் தெரியாதவன் கலக்கியது போல எல்லாப் பொருள்களையும் கலந்தடித்துக்கொண்டு ஏதோ ஒரு புதுமணம் வீசும்படிப் பாய்ந்தது, அந்தச் செந்தண்ணீர்.
5
ஒருபக்கம் குளத்திலிருந்த கழுநீர்ப் பூக்கள் மூழ்கிப்போயின.ஒருபக்கம் மணலில் எழுதிய பாவையைச் சிதைத்துவிட்டதே என்று மகளிர் அழுதனர்.ஒருபக்கம் நெல்-கட்டுகளை அடித்துச் சென்றுவிட்டதே என்று துடித்தனர்.ஒருபக்கம் வெள்ளம் ஊரை வளைத்துக்கொண்டதே என்று மழையைத் திட்டினர்.
6
பாடுபவர் பாக்கத்துக்கு வந்தது போலவும், ஆடுபவர் தெருச்சேரிக்கு வந்தது போலவும் வெள்ளம் ஊருக்குள்ளும், சேரிக்குள்ளும் புகுந்தது.வயல்களில் வாய்க்காலாய் பாய்ந்தது.வயலிலிருந்த வாளைமீன்கள் தென்னம் பாளைகளை உண்ணும்படி வயலில் நீர் பெருகிற்று.விதைக்கும் நிலங்கள் மணல்மேடுகளாக மாறின. 
7
உணர்த்த உணராமல் ஊடிய பெண்ணை வலுக்கட்டாயமாகத் தழுவுவதுபோல வெள்ளம் பாய்ந்தது. அதனால் வயல் உழவர்கள் வயல்வாளை மீன்களைப் பெற்றனர். 

ஆடுபவள் அணிகலன் 
8
இரண்டு மலைகள் போல் இருந்த இரண்டு கரைகளுக்கிடையே நுரையாகிய பூக்களைப் பூத்துக்கொண்டு சோலைகளி லெல்லாம் பாய்ந்தது.கண்டு மகிழ்ந்த மகளிர் கழுத்தில் மாலை சூடிக்கொண்டு ஆடினர்.ஆடவர் தலையிலிருந்த கண்ணியைப் பறித்துக் காதில் பூவாகச் செருகிக்கொண்டு ஆடினர்.கைவளையல், மோதிரம், முலையை மூடும் தொய்யகம். உடுத்த ஆடை, மேலாடை-மேகலை, இடையணி காஞ்சி, தோளணி வாகுவலயம் முதலானவற்றையெல்லாம் கவரும் வகையில் தென்னவன் படை பகைநாட்டில் புகுந்தது போல வெள்ளம் புகுந்தது.
9
விரும்பத்தக்க கட்டழகன் ஒருவன் அழகி ஒருத்தியின் கண்மலரில் நீரை எற்றித் தூவினான்.அவள் தன் கண்களைக் கைகளால் பொத்திக்கொண்டாள். மற்ற ருத்தி தன் கரும்பு போன்ற தோளால் அவனைச் சிறைபிடித்தாள்.இன்னொருத்தி அவளது பிடியை விலக்குவதற்காகப் பாய்ந்தாள்.இப்படிப் பல பெண்களின் கண்நிழல் பட்டு நீரே இருள்நிறம் கொண்டது. 
10
சூர்நறா = சுறுசுறுவென்று கடுப்பேற்றும் கள்
பெருநறா = பெருமிதக் கள்
கூர்நறா = மிகுந்த கள்
ஒருத்தியின் உடம்பு ஈர-அழகு எழிலுடன் தோன்றியது.ஈர நடுக்கத்தைப் போக்க அவள் கடுப்பேற்றும் கள்ளை உண்ணக் கையில் ஏந்தினாள்.அப்போது அவள் கண்கள் அந்தக் கள்ளைத் போலவே பெருமிதம் கொண்டிருந்தன.கள்ளை உண்டபொழுது அவளது கண்பார்வை களிப்புத் தரும் கள்ளைப் போல் இருந்தது.
11
அவளது கண்ணழகை ஒருவன் பார்த்தான்.
பாணன் அவனை ஆதரித்துப் பண் பாடினான்.அந்தப் பாட்டை விரும்பாத மற்றொருத்தி அவன்மேல் பித்தானாள்.
12
அவன் பார்வை எப்போது என்மேல் விழும் என்று அவள் வருந்தினாள்.இவளது பார்வையைக் கண்ட அவன் நடுங்கினான்.
13
முன்னவள் சிக்கிக்கொண்டாள்.அவள் அவனை விரும்பாமல் ஊடினாள்.
அவளது கண்கள் சிவந்தன.அவள் வகை வகையாக ஆடத் தெரிந்தவள்.ஆடிக் கொண்டே தன் தலையில் இருந்த பூவை எடுத்துச் செந்தனம் பூசிய அவன் மார்பின்மீது எறிந்தாள்.அவன் தலையை மிதித்தாள்.இப்படி அவனோடு தீர்வில்லாப் போரில் ஈடுபட்டாள்.இத்தனையும் நீராடும்போது நிகழ்ந்தன.  
14
ஒருபக்கம் ஆடலும் பாடலும் நிகழ்ந்தது.
புரிநரம்பு கொண்ட யாழில் இனிய ‘கொளை’ப்பண்கள் ஏழும் பிறந்தன.
யாழிசையோடு குழலிசையும் முழவிசையும் அளவொத்துக் கூடின.மகளிர் ஆடினர்.  
15
ஆடிய அந்தப் புனல்பாய் மணல்வெளி யாகிய திருமருத முன்துறையில், (மருதத்துறை > மதுரை) இடி முழக்கம் போல இசைமுழக்கம் இருந்தது.இதனைக் கண்டும் கேட்டும் துய்த்தனர்.நீராடிய பின் கழற்றி எறிந்த மாலைநுரைகளைச் சுமந்து கொண்டு வையைநீர் ஓடியது.வையையே!
உன் பயனைப் பாடினேன்.உனக்குள் இறங்கி என்றென்றும் நீராட விரும்புகின்றேன். 

திருமால்  - 1
இந்தப் பாடல் திருமாலைப் பலராமனோடு இணைத்து இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் காட்டிப் புகழ்கிறது. நானும் உன்மீது காம வேட்கை கொண்டுள்ள என் சுற்றமும் உன்னோடு ஒன்றி உன்காலடியில் நாளெல்லாம் கிடக்கவேண்டும் என ஏங்கி உன்னைப் போற்றுகின்றேன். வாய்மொழிப் புலவனே! அருள் புரிய வேண்டும் – என்று வேண்டிப் பாடல் முடிகிறது.

நாஞ்சில் ஒருகுழை ஒருவன் (பலராமன்)
அச்சம் தரும் ஆயிரம் தலையை உடைய பாம்பு தீயை உமிழும் திறமையோடு உன் தலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. மாமைநிறம் கொண்ட மலர்மகள் உன் மார்பில் வாழ்கிறாள். நீயோ வெண்சங்கு போன்ற வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறாய். வானளாவிய பனைமரம், அழகு மிக்க யானை இரண்டையும் கொடியாகப் பிடித்துக்கொண்டுள்ளாய். வாய் வளைந்திருக்கும் நாஞ்சில் என்னும் கலப்பையை ஒரு காதில் மட்டும் குழையாக மாட்டிக்கொண்டுள்ளாய்.  

பாடல்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

அருமறைப் பொருளே!
நீ, எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன். பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன். 
அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன். 
அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணி, கௌவுத்துவ-மணி) உடையவன். 
பெரிய மலை பற்றி எரிவது போன்ற பன்னி ழையாலான உடுக்கை-ஆடை உடையவன். 
கருடச்சேவல் அழகுதரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவன். 
உன் ஏவலின்படி உழைத்துக் கொண்டிருப்ப வர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமை   றையின் பொருளாக விளங்குபவன்.
இப்படி விளங்குபவனே!

பாடல்
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
 (அராகம் என்னும் செய்யுள் உறுப்பு)
வல்லின ஒற்று புணரொற்றாக வராமல் இசை முடுகி வரும்படிப் பாடப்பட்ட பாடல் இது. இந்த முடுகில் வரும் தமிழுக்கும் பொருள் உண்டு. இப்படி முடுகிசைக் குள்ளும் முடுகி வருபவன் திருமால்.

பாடல்
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.

அருளல் வேண்டும்
சொல்லச் சொல்ல அடங்காத பெரும்புகழை உடையவன் நீ. ‘போரிவேன்’ என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் கொட்டத்தை அடக்கிப் போரில் வென்றி கண்ட அண்ணல் (பெருந்தலைவன்) நீ.
காமன், பிரமன் என்னும் இருவர்க்கும் தந்தை நீ.ஒளிரும் அணிகலன்களை பூண்டிருக்கும் திருமால் நீ.மயக்கம் இல்லாமல் எல்லாவற்றையும் உணரவல்ல முனிவர்க்கும் நீ எதற்கு வந்திருக்கிறாய் என்பது தெளிவாகத் தெரியாது. அப்படிப் பட்ட மரபினை (கால்வழியை) உடையவன் நீ.அப்படிப்பட்ட உன்னை இன்ன தன்மை உடையவன் என்று சொல்லுதல் எனக்கு எளிதாகுமா?

சொல்லமுடியாத உன் அருமை எனக்கு நன்றாகத் தெரியும். என்றாலும் உன்னைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு எழுகிறது.உன் பெருமை யைச் சொல்ல வல்லமை இல்லாத நான் இங்குச் சொல்வதை ஏதோ காற்றில் பறக்க கும் மெல்லிய சொற்கள் என வெறுக்காமல் எனக்கு அருள்புரிதல் வேண்டும். திருமகளை மார்பிலே மறுவாக வைத்திருப் பவனே! அருள் புரிதல் வேண்டும்.

பாடல்
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
‘பொருவேம்’ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்


இவையெல்லாம் நீ
அந்தணர் வெற்றியும் சிறப்பும் மிக்க ஒழுக்கநெறி கொண்டவர். அவர்கள் காப்பாற்றும் அறநெறியும் நீ. ஆர்வமுடன் தேடுபவர்களுக்கு அளி தரும் வள்ளலும் நீ.
திறனில்லாதவர் திருத்தும் தீதற்ற சிறப்பினை உடைய மறச்செயலும் நீ. 
மறம் கொண்ட பகைவரை வருத்துபவனும் நீ.வானத்துக்கு அழகு செய்யும் நிலவொளி யைத் தரும் நிலாவும் நீ. சுட்டெரிக்கும் வெயில் தரும் கதிரவனும் நீ.ஐந்து தலைகள் கொண்டவனாக விளங்குபவனும் நீ. சிங்கமாகத் திகழ்பவனும் நீ.எல்லா நலமும் பொருந்தியதாகக் குற்றமற்று விளங்கும் விளைநிலமும் நீ. விளையாத பூமியும் நீ. இவற்றில் வரும் மணமும் நீ.
வலிமை மிக்க மேகம் நீ. மேகம் தவழும் விசும்பு நீ. விசும்பு தொட்டுக்கொண்டி ருக்கும் நிலமும் நீ. நிலத்தில் உயர்ந்த ருக்கும் இமயமலையும் நீ.

பாடல்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

நிலனும், நீடிய இமயமும், நீ. மன்னுயிர் முதல்வன்அதனால் நீ இன்னவரைப் போன்றவன், இந்தத் தன்மையன், அந்தத் தன்மையன் என்றெல்லாம்காணாமையால், பொன்னணிச் சக்கரத்தை வலப்புறம் கொண்டுள்ள மன்னுயிர் முதல்வன் எனக் கண்டேன். ஆதலின் நினக்கே உரித்தான இத் தன்மையும் அதன் புகழுமாகப் பொலிவுற்று வாழ்வாயாக!

பாடல்
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
உன் நிழல்

உன்னைப் போன்றது உன் புகழ். 
பொன்னைப் போன்றது உன் உடை. 
உன்னிடம் இருப்பது கருடப்புள். 
புரிசங்கு. 
பழிப்போரை அழிக்கும் சக்கரம். 
மணி பதித்த மார்பணி. 
எண்ண முடியாத புகழ். 
எழில் திகழும் மார்பு.
பாடல்
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
வேண்டுதல்

இவ்வாறெல்லாம் இருக்கும் உனக்கு உன் அடியுறையாக (செருப்பாக) நான் இருப்பேன். என்னோடு சேர்ந்து உன்மேல் காமம் கொண்டுள்ள என் சுற்றமும் ஒன்று சேர்ந்து இருக்கும். அவ்வாறு நாங்கள் நாளெல்லாம் உன்னொடு ஒன்றிக் கிடக்கவேண்டும் என்று நெஞ்சில் கிடக்கும் ஏக்கத்தோடு பரவுகின்றேன். திருவடி நிழலைத் தொழுது வாழ்த்துகின்றேன். 
வாக்குத் தவறாத வாய்மொழிப் புலவனே! வழங்குவாயாக!

பாடல்
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68


திருமால் பாடல் - 3

1 விசும்பு இல்லாத ஊழி, 
2 இசை-ஊழி, 
3 வளி-ஊழி, 
4 தீ-ஊழி, 
5 பனிமழை-ஊழி, 
6 வெள்ளம் மூழ்கிய ஊழி, 
7 மீண்டும் நிலம் தோன்றிய ஊழி என்று ஏழு ஊழிக்காலமாக விளங்குபவன் திருமால்
பழமையான இயற்கை மரபுப்படி பொன்னுலகம் என்னும் தேவர்-உலகமும், மண்-உலகமும் பாழ்பட்டுப் போயின.
விசும்பு இல்லாத ஊழி - நெய்தல் எண் ஆண்டுக்காலம்அதன் கருவாகத் தோன்றி உருவம் இல்லாமல் இயங்கிய (ஓம்)-இசை-ஊழி - குவளை எண் ஆண்டுக்காலம்
அதில் உந்திக்கொண்டு காற்று தோன்றிய வளி-ஊழி - ஆம்பல் எண் ஆண்டுக்காலம்
காற்றில் சுடர் விட்டு எரிந்த தீ-ஊழி - சங்கம் எண் ஆண்டுக்காலம்பனியின் தாக்கமும் மழையின் பொழிவுமாகவே நிலவிய பனிமழை-ஊழி - கமலம் எண் ஆண்டுக்காலம்மழைவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த வெள்ள-ஊழி – வெள்ளம் எண் ஆண்டுக்காலம்மீண்டும் நிலம் தோன்றிய ஊழி – இப்போதுள்ள காலம்என ஏழு நிலையூழிகளாகவும், கால-ஊழிகளாகவும் விளங்குபவன் திருமால் என்கிறது இந்தப் பாடல்.

பன்றி உருவில் திருமால்

பன்றி உருவில் நீ தோன்றிய ஊழிக்காலமும் உண்டு. எனவே உன் ஊழிப் பழமையை யாராலும் உணரமுடியாது.
நீசங்குநிறம் கொண்ட பலராமனுக்கு இளையவன்.இருட்டை ஆடையாக உடுத்திக்கொண்டிருக்கும் பனைக்கொடி யோனுக்கு (பரசுராமனுக்கு) அண்ணன்.
என்றெல்லாம் கூறுபவர்களுக்கு அவர்களின் கூற்றுப்படியே விளங்குபவன்.
உயர்ந்தோர் குறை இல்லாமல் ஆராய்ந்து கண்ட கேள்வி-வேதத்தின் நடுவனாக (நடுநாயகமாக) விளங்குபவன்.
இப்படி ஆராய்ந்தால் உன் தொன்மைச் சிறப்பு விளங்கும்.


திருமகளுக்கு யானை நீர் ஊற்றுதல்
திருமாலின் நெஞ்சுக்கூடு - உருவம்

வானவில் போன்ற பூணூல் அணிந்தவன்.
முத்து மதாணி (கவுத்துவ மாலை) அணிந்தவன்.நிலாப் போன்ற மச்சமாக உன் மார்பில் திருமகள் விளங்குகிறாள்.
வெள்ளைத் தந்த யானைகள் திருமகளுக்கு நீர் ஊற்றுவது போன்று உன் நெஞ்சகம் அமைந்து மணம் வீசுகிறது.நெஞ்சின் புள்ளியாக நிலத்தையும் (நிலமகளையும்) வைத்துக்கொண்டிருக்கிறாய்.இப்படி எண்ணிப் பார்த்து உரைப்பவர்களுக்கு அப்படியே விளங்குகிறாய்.

பதினாயிரம் பனங்காய்க் குலைகள் ஒரே நேரத்தில் விழுவது போல நீ உன் பகைவர் தலைகளைக் கொய்து வீழ்த்திப் போரிடும் படைக்கலன் கொண்ட குரிசில் நீ.

பகைவரை ஒருசேர உண்ணும் கூற்றம் நீ.
தீயில் பொன் ஒளிர்வது போல் தளதளக்கும் உடல்.அதில் இருள்நிறத் திருமணி.கண் தாமரை.மாலை தாமரை.வாய் தாமரை.
வாயில் வாய்மை.நிலம் போன்ற நோன்மை (பொறுமை).மழை [வான்] தோற்றம், நிறையுடைமை.இப்படி அந்தணர் மறை கூறுகிறது.

அவற்றையும் பிறவற்றையும்ஒத்திருப்பவன் நீ.எல்லாமும், எந்த இடமும், நீ.உருவம்,  உணவு, உணவின் வெளிப்பாடு எல்லாம் நீ.
சிவந்த வாய் கொண்ட கருடக்கொடி கொண்டவன் நீ.

கேள்வி என்னும் மறை சொல்லும் ஆசான் என்றும்.அந்தக் கேள்விக்குள்ளேபடிந்துள்ள வெற்றித் திருவுருவம் என்றும்.புகழின் ஒளி எனவும்,சுடரின் வளப்பாடு எனவும்,
பிறவாறும் அந்தணர்கள் உன்னைக் காண்கின்றனர்.

உன் புகழைப் போற்றும்போது என் வாயில் ஊறும் அமிர்தம் என் மனத்தில் அடைத்துக் கொள்கிறது.என் நோன்பும் அமிர்தம் ஆகிறது.சாகா மரபினைத் தருகிறது.
அமரர்க்காகச் சென்றவன் நீ.உன் அடியில் எம் தலை பொருந்துமாறு வைத்து வணங்குகின்றோம்.திரும்பத் திரும்பப் பலமுறை வணங்குகின்றோம்.

துன்புறும் நெஞ்சத்தால் வாழ்த்துகிறோம்.
சுற்றம் சுற்றமாக வந்து வாழ்த்துகிறோம்.
தொழுதுப் போற்றுகிறோம்.எங்களது அறிவு கொடும்பாடு (கொடுமைப் படுத்துதல்) அறியாமல் இருக்கச் செய்வாயாக என வேண்டுகிறோம்.

பரிபாடல் 2 திருமால்

திருமால்
கடவுள் வாழ்த்து
பாட்டு - கீரந்தையார்
இசை - நன்னாகனார்
பண் - பாலையாழ்

தொல் முறை இயற்கையின் மதிய … …
:... ..... ... மரபிற்று ஆக,
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்-ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்-ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்
நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்’ என்போர்க்கு இளையை ஆதலும்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே.
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்திலம்
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40
தலை இறுபு தாரொடு புரள
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55
சாயல் நினது, வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.
உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி; 65
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.
பல் புகழும் பரவலும்
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
:... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே. 76




Popular posts from this blog

சங்க இலக்கியம் - II அலகு - 5 பட்டினப்பாலை

சங்க இலக்கியம் - II அலகு - 4 சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியம் - I அலகு - 5 புறநானூறு ( 10 பாடல்கள் )