சங்க இலக்கியம் - II அலகு - 5 பட்டினப்பாலை


                    பட்டினப் பாலை

(சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது)

👉பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . 
👉பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். 
👉பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும். 
👉இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. 
👉இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். 
👉 கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப் பாலை ஆகும்.

நூலின் சிறப்பு 
👉சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். 👉பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.

பட்டினம் 
👉துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.  

பாட்டின் அமைப்பு 
பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றன் தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலை என்ன அகும்? அவள் தன் பிரிவைப் பொறுப்பாளா? தான் திரும்பும்வரை அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்றஐயம் அவன்
உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டு கின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனைதான் மிஞ்சும்; வேதனையோடு செய்யும் செயலில் வெற்றிகாண முடியாது. ஆகையால் பிரிவு காதலிக்குத் துன்பம் தருவதோடு தனக்கும் துன்பத்தைத் தரும் என நினைக்கிறான் இதனால்

" நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின் மேல் வீசிய வேல்படையைக் காட்டினும் கொடுமையானது. என்காதலியின் மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற்சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் ( நன்மையை, இன்பத்தை)தருவன. ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாஇருந்தாலும் கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன். என் மனமே! பிரிந்து போகவேண்டும் என எண்ணுவதை மறந்துவிடு".
என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள்கருத்தாகும். இதனை

" திருமாவளவன்
தெவ்வர்க்கு ஓங்கிய
வேலினும் வெய்ய கானம்;
அவன், கோலினும் தண்ணிய
தடம்மெல் தோளே.
முட்டாச் சிறப்பின்
பட்டினம் பெறினும்
வாரிரும் கூந்தல்
வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய செஞ்சே."
என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலம்.

நூலின் பொருள் 
காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.

இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

🌷காவிரியின் சிறப்பு 
🌷சோழ நாட்டின் சிறப்பு
🌷நகரச் சிறப்பு
🌷மக்களின் விளையாட்டுக்கள்
🌷இரவில் துயிலும் நிலை
🌷கடற்கரையில் பகல் விளையாட்டு 
🌷ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்ட சாலை முற்றம்
🌷மகளிர் வெறியாடி விழாக்கொண்டாடும் ஆவணம்
🌷பலவகைக் கொடிகளின் காட்சி
🌷வளம் பல நிறைந்த தெருக்கள்
🌷வணிகர்களின் வாழ்க்கை முறை
🌷பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
🌷தலைவனது அவல நிலை
🌷திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
🌷பகைவர்மேல் போருக்கு எழுதல்
🌷பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்
🌷திருமாவளவனது ஆற்றல்
🌷சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
🌷தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல் 


1.காவிரியின் சிறப்பு

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா 
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்  

மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி. ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன். திங்களைப் போல் காலம் மாறாமல், காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது. வானம்பாடி ‘வ்வான் வ்வான் ‘ என்று குரல் தந்து தன்னையே பாடிக்கொள்ளும். ‘தளி’ என்பது மேகத்திலுள்ள நீர். வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே. சூரியன் திசைமாறித் தென்முகமாகச் சென்றாலும், வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும், காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம். காவிரித் தாய்க்குத் தலை. தலைக்காவிரி தோன்றும் குடகுமலை.

2.சோழ நாட்டின் சிறப்பு

விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி 10
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கட்

கழனியில் கரும்பும் வயலில் ஆம்பலும் பூக்கும். காவிரியாற்றுக் கழனிகளில் என்றும் விளைச்சல் இருந்து கொண்டே யிருக்கும். கழனிகளில் விளைந்த கரும்பை ஆலையில் சாறு பிழிந்து வெல்லமாக்கு வதற்காகக் காய்ச்சிய புகையின் சூடு பட்டு நீர் வயல்களிலிருந்த நெய்தல் பூக்கள் சாம்பிவிடுமாம். சாம்புதல் = சூடுபட்டு வாடுதல்

காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழல் துயில்வதியும் 15
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி


விளையாடிய எருமைக் கன்றுக்குட்டி கதிர் முற்றிய நெல் வயலில் இறங்கிக் காலால் கதிர்களைத் துவட்டி விட்டு நெல்லைப் பாதுகாத்து வைத்திருக்கும் நெற்கூட்டின் நிழலில் படுத்திருக்கும். ஊரைச் சூழ்ந்துள்ள வயல் முற்றங்களில் தென்னை, வாழை பாக்குமரம் மஞ்சள், மா, பனை, சேம்பு, இஞ்சி முதலான பணப்பயிர்கள் விளைந்திருக்கும்.

அனகர் வியன்முற்றத்துச் 20
சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் 25


காயும் உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும் கோழிகளை, காதில் அணிந்திருக்கும் பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவை குழந்தைகள் உருட்டும் நடைவண்டிகளைத் தடுக்கும் செல்வச் சீமாட்டியர் சுடரும் நெற்றியும், எதையும் பொருட்படுத்தாத கள்ளம் கபடமற்ற மடமை நோக்கமும் கொண்டவர்கள். காதிலே மதிப்புமிக்க குழைகளையும், கழுத்திலே பொருத்தமான இழைகளையும் அணிந்திருப்பர். முற்றத்தில் உணவு தானியங்களை அந்த மகளிர் காயவைத்துக் கொண்டிருப்பர். கோழிகள் அவற்றைக் கவர்ந்து உண்ணும். அந்தக் கோழிகளை அவர்கள் தம் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளைக் கழற்றி எறிந்து ஓட்டுவர். அவர்களுடைய பிள்ளைகள் மூன்று சக்கர வண்டியை அவ்விடங்களில் உருட்டிக்கொண்டு செல்லும்போது அந்தக் குழைகள் தடுக்கும். தடையையோ, குழையின் மதிப்பையோ பொருட்படுத்தாமல் பிள்ளைகள் தம் தேர் வண்டியை உருட்டிச் செல்வர். முக்கால் சிறுதேர் = நடைவண்டி உணங்கு உணா = காய வைத்திருக்கும் உணவுப் பண்டம் புரவியின் உருட்டும் = குதிரைபோல் இழுத்துச் செல்வர்

விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு  


விலங்கு-பகை அல்லது மக்களை மக்கள் தாக்கும் பகை இல்லாதது சோழநாடு. சோழ நாட்டில் பயிர்களை உண்ணும் விலங்குபகை உண்டு. உட்பகை, வேற்றுநாட்டுப் பகை போன்ற எந்தப் பகையும் இல்லை. கொழுத்துக் கிடக்கும் செல்வக் குடிகள் பலவாகப் பெருகியிருந்தன. இவர்கள் வாழும் செழுமையான சிற்றூர்கள் பலவற்றைக் கொண்டது சோழநாடு.

3. நகரச் சிறப்பு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி 30
பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்


காவிரிப்பூம்பட்டினத்தில் நிலவாணிகம் - உப்பேற்றிக்கொண்டு ஆற்றின் வழியே சென்ற பஃறி மிதவை பண்டமாற்றாக விற்பனை செய்த நெல்லோடு மீண்டது. ஆற்றோரங்களில் குதிரைகளைக் கட்டும் முளைக்கம்பத்தில் அந்தப் பஃறிகள் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடாமல் இருப்பதற்காகக் கட்டப்பட்டிருந்தன.

கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்
பொழிற் புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன் 35
உருகெழுதிறல் உயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
இருகாமத் திணையேரிப்


காதலர் குளம் - சிவன் கோயிலுக்கு எதிரில் ஆணும் பெண்ணும் தம் காமம் நிறைவேற மூழ்கி எழும் இரட்டை ஏறி இருக்கும். உப்பங்கழி, உழுநிலம், பொழில், புறவு, பூஞ்சோலை ஆகியவற்றைக் கொண்டது புகார் நகரம். மகர வெண்மீனைக் கொடியில் கொண்டவன் காமவேள். மழைமேகம் இல்லாத வானத்தில் மக(ர) வெண்மீன் தெரியும். காமவேள் கோட்டம், நிலாக்கோட்டம், குமர கோட்டம் ஆகிய கோயில்கள் மணக்கும் பூக்கள் கொண்ட அந்தச் சோலைப் பகுதியில் இருந்தன. காமவேள் கோட்டத்தில் இரண்டு குளங்கள் இருந்தன. ஒன்று ஆண் குளிக்கும் குளம். மற்றொன்று பெண் குளிக்கும் குளம். இதில் குளித்தால் பிரிந்திருக்கும் கணவன் மனைவியாகிய இருவர் காமமும் இணையுமாம். இடைக் குறிப்பு - அமரர் தருக்கோட்டம் 1 கற்பகமரக் கோயில், வெள்யானைக் கோட்டம் 2 இந்திரன்-யானைக் கோயில், புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் 3 நாக-தெய்வங்கள் இருக்கும் கோயில், உச்சிக்கிழான் கோட்டம் 4 சூரியன் கோயில், ஊர்க்கோட்டம் 5 குலதெய்வக் கோயில், வேல் கோட்டம் 6 வேல் கோயில், வச்சிரக் கோட்டம் 7 இந்திரனின் வச்சிரப்படைப் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் 8 ஊரின் புறத்தே ஊரை அணைத்துக் காக்கும் எல்லைத்தெய்வக் கோயில், நிக்கந்தக் கோட்டம் 9 அய்யனார் கோயில் \ (கந்தன் = துணைவன் \ காதன்மை கந்தா – திருக்குறள்) (நிக்கந்தன் = பற்று அற்றவன்) அருகன் கோயில், புத்தன் கோயிலுமாம், நிலாக் கோட்டம் 10, ஆகிய கோயில்கள் புகார் நகரத்தில் இருந்தன. மற்றும், கடலொடு காவிரி தலையலைக்கும் முன்றில், மடலவிழ் நெய்தலங்கானல் தடம் உள, சோமகுண்டம் 1 நிலாக்குளம், சூரியகுண்டம் 2, துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரோடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார், (சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதை).

புலிப்பொறிப் போர்க்கதவின் 40
திருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி 45
ஏறுபொரச் சேறாகித்
தேரொடத் துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டுந் 50


திருமாவளவனின் வெள்ளை மாளிகை - அரசனின் வெள்ளை-மாளிகையின் கதவில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கே மொழி வளரப் பாடுபடுவோருக்கு உணவு வழங்கப்படும். புலிச் சின்னம் - திருமாவளவன் அரண்மனையின் கதவில் புலி உருவம் பொறிக்கப் பட்டிருந்தது. அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கியது. மொழி வளர்க்கும் அறச்சாலை - தமிழ்மொழி நிலைபெற்ற புகழ் உடையது. அது மேலும் வளர்வதற்காக அறச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. சோறு – சேறு – நீறு - அறச்சாலையிலுள்ள சமையலறையில் சோறாக்கி வடித்த கஞ்சி ஆறுபோல ஓடியது. அங்கு யானைகள் போரிட்டதால் அதன் காலடியில் கஞ்சி ஓடிப் பாயும் மண் சேறாக மாறியது. அவ்வழியே தேர்கள் சென்றதால் சேற்றுமண் காய்ந்து பொடிமண் நீராக மாறியது. ஓவியம் - அரண்மனைச் சுவரில் கலைத்திற வேலைப்பாடுகளுடன் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. வெண்கோயில் - வெள்ளை மாளிகையாக விளங்கிய அரண்மனைச் சுவரிலிருந்த ஓவியங்களைத் தேர்த்துகள்களின் புழுதிகள் மாசுபடச் செய்தன.

தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம் 55
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்


கேணி-முற்றத்தில் முனிவர் தீ வளர்த்து வேள்வி செய்வர். தவப்பள்ளி - கேணி முற்றம் - விரிந்த சடைமுடி கொண்ட முனிவர்கள் தீ வளர்த்து வேள்வி செய்தனர். கேணிக்கரையின் முற்றத்தில் செய்தனர். திருமறைப் பாட்டுப் பாடிக்கொண்டு செய்தனர். பாட்டொலி மிடற்றிலிருந்து வந்தது. தாழ்ந்த காட்டுப் பகுதியிலிருந்த முனிவர்களின் தவப் பள்ளிகள் பலவாக இருந்தபடியால் அவை ‘பல்சாலை’ எனப் பெயர் பெற்றிருந்தன. வேள்விப் புகையை அங்கிருந்த குயில்கள் வெறுத்தன. தம் பெண்குயிலோடு பறந்து சென்றன. பூதம் காவல் புரியும் காப்புள்ள கோயில் பகுதிக்குச் சென்றன. அங்கே தங்கியிருந்த தூதுணம் புறாக்களோடு ஒதுக்கிடங்களில் தங்கின. இடைக்குறிப்பு - பொய் வேடதாரிகளையும், பொல்லாங்கு செய்வோரையும் ‘பூதம் புடைத்து உண்ணும் பூதச்சதுக்கம்’ – சிலப்பதிகாரம் 5 134, பூதச் சதுக்கத்தில் ‘அரசன் வெல்க’ என்று பலி கொடுத்தனர். மணிகேகலை 7 78, புகார் நகரத்தில் காயசண்டிகாயை அவளது கணவன் காஞ்சணன் தேடிய இடங்கள், பூதச்சதுக்கம், பூமரச்சோலை, மாதவர் இடங்கள், மன்றம், பொதியில் , (மணிமேகலை 20 22). கணவனை அன்றி வேறு தெய்வத்தைத் தொழாத கற்புக்கரசி மருதியின் அழகில் மயங்கிய ககந்தன் மகன் தன் ஆசைக்கு இணங்கும்படி மருதியை அழைத்தான். ‘பிறர் நெஞ்சு புகுந்தேன் என்னைக் கொன்றுவிடு’ என்று மருதி சதுக்கப் பூதத்திடம் முறையிட்டாள். அப் பூதம் அவளது கற்பை எண்ணி அவளை உண்ண மறுத்து விட்டது. (மணிமேகலை 22 – 50, 55)

மக்களின் விளையாட்டுக்கள்

வரிமணல் அகந்திட்டை 60
இருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்
வறளடும்பின் மலர்மலைந்தும் 65
புனலாம்பற் பூச்சூடியும்
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் 70
பெருங்சினத்தாற் புறக்கொடாஅது
இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
பறழ்ப்பன்றிப் பல்கோழி 75
உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்  


காவிரிப்பூம்பட்டினத்தில் கையாலும், கருவிகளாலும் மோதி, கவண் எறிந்து போர்ப்பயிற்சி பெறும் முரண்-களரி இருந்தது. இது வீர விளையாட்டுக்களின் பயிற்சிக்களம். இதற்கு முரண் களரி என்று பெயர். முதிர்ந்த மரங்கள் சூழ்ந்த ஆற்றோர மணல்திட்டில் ‘முரண்களரி’ எனப்பட்ட போர்ப் பயிற்சிக்களம் இருந்தது. கருந்தொழில் மாக்கள் - செந்தொழில் = உதவி புரியும் தொழில், கருந்தொழில் = போர்த்தொழில், கருந்தொழில் மக்களின் சுற்றத்தார் தங்களுக்குள்ளே மோதி ஆரவாரத்துடன் போர்ப்பயிற்சி செய்து கொண்டனர். சத்துணவு - கடலில் பிடித்த இறால் மீனைச் சுட்டுத் தின்றனர். வயலில் பிடித்த ஆமைக் கறியை வேகவைத்துத் தின்றனர். அடையாளப் பூ - அடையாளம் தெரிவதற்காக ஒருவர் மணல் மேட்டில் பூக்கும் அடும்பு மலரைத் தலையில் அணிந்திருந்தார். மற்றொருவர் நீரில் பூக்கும் ஆம்பல் மலரை மாலையாகக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். நடுவர் - “நாள் மீன்’ என்னும் சூரியன் போல் நடுவர் நடுவில் இருந்தார். சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுழல்வது போல் போர்ப்பயிற்சிகள் நடந்தன. மலர்தலை மன்றம் - மலரும் தலைமுறையினரின் (இளைஞர்களின்) மன்றம் அந்த முரண்களரி. கைப்போர் - மற்போர், குத்துச் சண்டை போன்ற சண்டைப் பயிற்சிகளில் காயால் மோதிக்கொண்டனர். இகல் மொய்ம்பினோர் - இகல் என்பது விளையாட்டுக்காக மாறுபடல். அழிக்கும் பகை அன்று. உடலின் திணவைக் காட்டுவது இகல். ஆகையால் சினங்கொண்டு பின்வாங்காமல் தாக்கினர். கவண் - கவணில் கல்லை வைத்து எறிந்து தாக்குவது. அக்காலப் போர் முறைகளில் ஒன்று. இதில் அவர்கள் பயிற்சி செய்தபோது வீசிய கற்களால் பனை மரத்திலிருந்த பறவைகள் பறந்தோடிச் சென்றன. ஆட்டுச் சண்டை(நிகழ்வுப்படம்) \ காடைச் சண்டை \ அந்தப் பனை மரத்தடியில் செம்மறியாட்டுக் கடாவையும், சிவல் என்னும் காடைகளையும் மோதவிட்டு அவற்றின் சண்டையைப் பாரத்துக் கொண்டிருந்தனர்.

கடற்கரையில் பகல் விளையாட்டு


கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய 80
குறுங்கூரைக் குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலையுணங்கு மணல்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் 85
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர 90
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்


நிறை-நிலா வெளிச்சத்தில் ஆணும் பெண்ணுமாகப் பரதவர் உண்டும் ஆடியும் மகிழ்வர். காதல் விளையாட்டுகள் கூரைவீடுகளின் இடையே வேல் நட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது. வயிரம் பாய்ந்த மரக்கொம்புகளை நட்டு அதில் மீன்வலையைக் காய வைத்திருந்தனர். இது நடுகல் அரண் போல் விளங்கியது. வலை விரித்த மணல் அவர்களுக்கு மெத்தை. இங்கிருந்த தாழைமரத்து அடியில்-தான் காதலர்களின் களியாட்டங்கள் நிகழ்ந்தன. பூச்சூடல் - மகளிர் கூதாளம் பூவைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். மனையணங்கு வழிபாடு - நிறைமதி நாளும் மறைமதி நாளும் ‘உவா’ எனப்படும். அந்த நாள்களில் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். எனவே அந்த இரண்டு நாள்களிலும் பரதவர் கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை. அவரவர் மனைவிமாருடன் கூடி மனையில் அணங்குவிழாக் கொண்டாடுவர். சுறாமீன் கொம்பு - அணங்குவிழா நாளில் வீட்டில் சினையுற்றிருக்கும் சுறாமீன் கொம்பு ஒன்றில் குத்தி நடப்பட்டிருக்கும். காதலர் உண்டு களித்து உடலுறவு கொள்வதைக் காட்டும் அடையாளச் சின்னம் சுறாமீன் கொம்பு. இது மனையில் நடப்பட்டிருந்தால் அம்மனைக்குள் வேறு யாரும் செல்லமாட்டார்கள். பூ மாற்றம் - மற்ற நாட்களில் கூதாளம் பூவைச் சூடிக்கொள்ளும் மீனவப் பெண்கள் அணங்குவிழா நாளில் தாழம் பூவைத் தலையில் சூடிக்கொள்வர் பனைக்கள் - கடலுக்குள் செல்லும்போது கள் பருகாத பரதவர் அணங்கு நாளில் பனங்கள்ளைப் பருகுவர். ஆடை மாற்றம் - பிற நாட்களில் நூலாடை உடுத்தியிருந்த பரதவப் பெண்கள் அந்த நாட்களில் தழையாடை அணிவர். உண்டாட்டு - வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் குறிப்பிடும் உண்டாட்டு கூடிக் களிக்கும் புறத்திணையின் பாற்பட்டது (புறத்திணையியல் 2) இங்குக் கூறப்படும் உண்டாட்டு காதல் இருவர் களிப்புடன் தனிமையில் ஆடுவது.

புலவுமணற் பூங்கானல்
மாமலை யணைந்த கொண்மூப் போலவும் 95
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும்
மலியோத் தொலிகூடல்
தீதுநீங்கக் கடலாடியும்
மாசுபோகப் புனல்படிந்தும் 100
அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல்விளை யாடிப்  


மீனவர் கடலாடல் - காவிரி ஆறு கடலில் கலக்கும் கூடல்நிலம் கொண்டது புகார் நகரம். மலையைத் தழுவும் மேகம் போல அங்குக் காவிரி கடலைத் தழுவியது. தாயைத் தழுவும் குழந்தையைப் போலக் காவிரி கடலைத் தழுவியது. புலவுமணல் - வைகறையில் தனித்துக் கூடிய காதலர் மாலையில் பொது இடமாகிய கருவாட்டு நாற்றம் வீசும் மணல் பரப்பில் விளையாடுவர். கடலாடல் \ புனலாடல் - கடலில் குளித்தால் செய்த தீமைகள் அகலும் என்று நம்பினர். என்றாலும் உப்பு உடலில் படிந்துவிடும் அல்லவா? அதனைப் போக்க நன்னீர் ஓடும் ஆற்றில் குளித்தனர். நண்டு விளையாட்டு - கடல் நண்டுகளை கடலோர மணலில் அங்குமிங்கும் ஓடச்செய்து அதனைப் பார்த்து மகிழ்ந்தனர். திரை விளையாட்டு - கடலலைகளில் நின்றும், ஓடியும், ‘நீரா, நிலமா’ என்று தொடச் சொல்லியும் விளையாடி மகிழ்ந்தனர். பொறி விளையாட்டுக் காணல் - மிதக்கும் பொருள்களைக் கடலலையில் போட்டால் அது கரைக்கு வந்துசேரும். இவ்வாறு மீள்வதைக் கண்டு களித்தல் பொறி விளையாட்டு. இது ஒருவகைக் கட்பொறி விளையாட்டு.

இரவில் துயிலும் நிலை


பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் 105
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும் 110


மகளிரும், மைந்தரும் மாலை மாற்றிக்கொண்டு மகிழ்ந்து திளைப்பர். கலவி என்னும் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செல்வர் - பூமலி பெருந்துறை என்பது காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பகுதி. அங்கு ஆண்டு முழுவதும் மாறிமாறிப் பொய்க்காமல் பூத்துக் கொண்டேயிருக்கும் மரங்கள் இருந்தன. அந்த இடம் வீடுபேற்றுச் சுவர்க்கம் போன்றது. அங்கிருந்த வீடுகளில் மகளிர் காலத்திற்கேற்ற கோலம் பூண்டு கூடிக்களித்து இன்புற்றனர். கணவனோடு கூடித் திளைத்த மகளிர் வெளியிலோ, வீட்டிலோ கூடித் திளைக்கும்போதும், வெளியில் உலாவும்போதும் முறையே பருத்தித்துணி உடுத்தியும், பட்டாடை உடுத்தியும் மகிழ்ந்தனர். மட்டு (சுவைநீர்) மதுமகிழ் (களிப்புநீர்) பருகல் - வெளியில் உலாவும்போது மயக்கம் தராத மட்டுகள்ளைப் பருகியவர்கள் கூடித் திளைக்கும்போது மதுக்கள்ளை உண்டு மகிழ்ந்தனர். மாலை மாற்று விளையாட்டு - மைந்தர் தலையில் சூடியிருந்த கண்ணி மகளிர் தலைக்கு மாறிவிட்டது. மகளிர் கழுத்தில் அணிந்திருந்த மாலை மைந்தர் கழுத்துக்கு மாறிவிட்டது.

நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
பாட லோர்த்தும் நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்தும்
கண்ணடைஇய கடைக்கங்குலான் 115
மாஅகாவிரி மணங்கூட்டும்
தூஉவெக்கர்த் துயில் மடிந்து  


நிலாமுற்றத்தில், உயர்ந்த கால் நட்டுக் கட்டப்பட்டிருந்த மாடங்களில் கூடிக் களித்த காதலர் கடலில் விளக்கு ஒளியோடு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் திமில்களில் எரிந்த விளக்கொளிகளை எண்ணிக் கணக்குப் போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். காவிரி மணலில் வெண்ணிலாவின் பயனைத் துய்த்துக் கொண்டிருந்த மக்கள் அங்கு மேடையில் இருந்து பாடப்பட்ட பாட்டுகளைக் கேட்டு மகிழ்ந்தனர். நாடகங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் அந்த மணல் வெளியிலேயே தூங்கிவிட்டனர்.

ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்


வாலிணர் மடற்றாழை
வேலாழி வியந்தெருவின்
நல்லிறைவன் பொருள்காக்கும். 120
தொல்லிசைத் தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது 125


உல்கு என்பது சுங்கவரி. புகார்த் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு உல்குவரி வாங்கப்பட்டது. உல்குவரி பெறப்பட்டதற்கான முத்திரையும் பொருளின்மீது இடப்பட்டது. இப்படி முத்திரையிட்டு மாளாத அளவுக்குப் பொருள்கள் குவிந்து கிடந்தன. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் தெருக்களில் குவிந்துகிடந்தன. வெண்ணிற மடல்களை உடைய தாழைமரங்கள் மண்டிக்கிடந்த தெருக்கள் அவை. அப்பொருள்களில் அரசனுக்குச் சொந்தமான பொருள்களை ‘இறைவன் தொழில் மாக்கள்’ காவல் புரிந்தனர். வேலேற்றிய வண்டி அப் பொருள்களைக் காக்கும் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரியனாம் தேரை இழுத்துச் செல்லும் குதிரை போல நாள்தோறும் பகல் முழுவதும் உல்கு செய்யப்பட்டது. உல்கு செய்யச் செய்ய உல்கு செய்யப்படாத பொருள்களின் இருப்பு குறையவே இல்லை.

வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும 130
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி


காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி - கடலிலிருந்து மேகம் முகந்து சென்ற நீர் மலையில் பொழிவது போல நீரிலிருந்து பொருள்கள் நிலத்தில் ஏற்றப்பட்டன. மலையில் பொழிந்த நீர் கடலுக்கு வந்து பரவுவது போல நிலத்திலிருந்து பொருள்கள் நீரிலுள்ள நாவாயில் பரப்பப் பட்டன. அந்தப் பண்டங்கள் அளந்தறிய முடியாதபடி பற்பலவாகக் குவிந்துகொண்டிருந்தன.

அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி 135
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி


புலி முத்திரை - ஏற்றுமதிக்காகவும், இறக்குமதியிலிருந்தும் வந்த மதிப்பு மிக்க பொருள்களின்மீது புலிச் சின்னம் பொறிக்கப்பட்டது. பின்னர் அவை பொதிமூட்டைகளாகக் கட்டிக் காப்பகத்தில் அடுக்கப்பட்டன. உடல் வலிமையைக் கண்ட மாத்திரத்திலேயே அச்சம் தரும் காவலாளிகள் அவற்றைப் பாதுகாத்தனர்.

மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற 140
ஏழகத் தகரோ டுகளு முன்றிற்  


மழைமேகங்கள் விளையாடும் மலையுச்சியிலும் மலையிடைப் பிளவுகளிலும் வருடை என்னும் வரையாடு ஏறி விளையாடுவது போல வேட்டையாடும் ஆண் நாய்களும், முட்டித் தாக்கும் செம்மறியாட்டுக் கடாக்களும் முற்றங்களில் அடுக்கியுள்ள மூட்டைகளின் மேல் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.

மகளிர் வெறியாடி விழாக்கொண்டாடும் ஆவணம்


குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயும் உயர்மாடத்துச் 145
சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குல்
தூசிடைத் துகிர்மேனி
மயிலியல் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர 150
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் 155


மாடங்களில் முருகன் வழிபாட்டு வெறியாட்டம் நடைபெறும். மூட்டைகள் அடுக்கிக் கிடக்கும் பகுதியை அடுத்து மாடி வீடுகள். அதற்கு வளைந்த தாழ்வாரம் இறக்கிய திண்ணை. திண்ணைக்கு ஏற நீண்ட சிறுசிறு படிக்கட்டுகள். மேல்மாடி வீட்டுக்கு நுழைந்தேறக் குகை போன்ற வாயில். அதன் வழியே ஏறிச்சென்றால் ‘போகிடைக் கழி’. இது அதற்கு வழி நுழையும் வாயில். மாடியில் மகளிர் குரவை விளையாடும் காட்சி தெரிகிறது. அந்தச் சாயல் அழகியர்களுக்குச் சிவந்த காலடிகள். நெருங்கிய தொடைகள். பசுமையான தழையாடை மூடிப் பகட்டிக்கொண்டிருக்கும் அல்குல். மயிலின் சாயலையுடைய அவர்களின் பவளம் போன்ற மேனியில் பட்டாடை. மான்போல் மருண்ட பார்வை. கிளிபோல் மழலைமொழி. பூப் போல் மென்மையாகத் தோன்றும் மேனிச் சாயல். இவர்கள் கைகூப்பி வெறிநடனம் ஆடினர். அது மலைமுகட்டில் மலர்த் தாதுகளைக் கொட்டிக்கொண்டு கொடியோடு கூடிய காந்தள் பூ காற்றில் ஆடுவது போல் இருந்தது. ‘போகிடைக்கழி’ = மாடி வீட்டுக் கூடம், வளி நுழையும் வாயில் = திறந்தவெளிச் சன்னல்.

குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து  


கடைத்தெருவில் ஒத்திசையின் எதிரொலி. அழகியர் வெறியாடிய நடனத்தின்போது குழலின் ஒலி அகவலோசைப் பாடல்போல் அகவிற்று. யாழின் ஒலி வண்டிசைப்பது போல் இருந்தது. முழவின் ஓசை அதிர்ந்தது. முரசின் ஓசை ஏதோ சொல்வதுபோல் இருந்தது. இந்த விழா முழக்கத்தின் ஒலி கடைத்தெருவிலும் முழங்கிற்று.

பலவகைக் கொடிகளின் காட்சி

மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழ கொடியும 160


கோயிலில் கொடி - தெய்வத்தை வைத்து மலர்ப்பூசை செய்யும் கோயில் வாயிலில் வழிபாடு செய்யும் பலரும் போற்றிப் புகழும் கொடி பறந்தது. தெய்வ உருவம் எழுதப்பட்ட எழுப்பட்ட கொடி பறக்க விடப்பட்ட கம்பத்தை இக்காலத்தில் துவஸ்தம்பம் என்கின்றனர்.

வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப் 165
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்


அற-மறச் சாலைகளில் கொடிகள் - காட்டாற்று வெள்ளம் போனபின் காய்ந்து கிடக்கும் வெண்மணலின் ஓரத்தில் பேக்கரும்பின் பூ வெள்ளை வெளேரென்று பூத்துக் கிடப்பது போல் சோறு படைக்கும் அறச்சாலைமாடத்தில் (‘மஞ்சிகை’ யில்) கொடி கட்டப்பட்டிருந்தது. அக் கொடிக்கம்பம் நடப்பட்டிருக்கும் இடத்தில் பலகாரமும், வெண்பொங்கலும் படையலாக வைக்கப் பட்டிருந்தன. அந்த இடம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது. கம்பத்தின் ஓரத்தில் வேல் (‘காழ்’) நட்டுக் கேடயம் மாட்டப் பட்டிருந்தது. இங்கும் கொடி பறந்தது. இவை படைவீரர்களுக்கும், காவல்-தொழில் புரிவோருக்கும் சோறு வழங்கும் அறச்சாலை எனக் காட்டும் கொடிகள்.

பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர் 170
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்


பட்டிமன்றக் கொடி - ‘ஆணை’ என்பது வாய்மை. ‘கேள்வி’ என்பது கேட்டுக் கேட்டு வளர்த்துக்கொண்ட அறிவு. வழிவழியாக வரும் வாய்மைக் கருத்துகளைக் கேட்டுக் கேட்டு மெய்ப்பொருள் காட்சியில் துறைபோய பெருமக்கள் தான் ‘தொல்லாணை நல்லாசிரியர்’ (Ancient philosophers). இவர்கள் தெளிவு பெறுவதற்காகக் கருத்துக்களால் முரண்பட்டு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகக் கொடி கட்டப்பட்டிருந்தது.

வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும் 175


கடலில் கப்பலின் கொடி பறக்கும் - முளையில் கட்டப்பட்டிருக்கும் களிறு போலப் புகார்த் துறைமுகத்தில் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாவாயின் உச்சியில் கொடி கட்டப்பட்டிருந்தது. வெளில் = விலங்குகளைக் கயிற்றில் தொடுத்துக் கட்டிவைக்கும் முளைக்-குச்சி, இளக்கும் = இணக்கும் > இணைக்கும், துவன்று = பின்னிப் பிணைந்து, மிசை = உயரம், நசை = விருப்பம் \ நாவாய்க்-கப்பலின் உச்சியில் பறக்கும் விருப்பம் தரும் கொடி.

மீந்தடிந்து விடக்கறுத்து
ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவுநொடைக் கொடியோடு 180


மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் எனக் காட்டும் கொடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் பறக்கும் கள்ளுக்கடையின் கொடி - பெரிய மீன்களை வெட்டி, அதன் நச்சுப்-பகுதிகளை நீக்கிவிட்டு மீன்கறியைப் பொறித்துத் தந்தனர். அந்த மணல்மேட்டு முற்றத்தில் மீன் கவிச்சல் போக மலர்களைத் தூவி வைத்திருந்தனர். அங்கே நறவுக்கள் விற்கும் கடை இருந்தது. பலர் உள்ளே செல்லும் அந்தக் கள்ளுக்கடையின் கதவில் “பலியாவீர்’ என்று காட்டும் அடையாளக் குறி பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களில் விற்பனையை அறிவிக்கும் தனித்தனிக் கொடிகள் பறந்தன.

பிறபிறவு நனிவிரைஇப்
பல்வே றுருவிற் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்  


வளம் பல நிறைந்த தெருக்கள்

செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
இந்தப் பதாகை நிழலில்தான் தேவர் உலகம் போன்ற ஊராகக் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுக நகரம் விளங்கியது. இந்தக் கொடிகளேயன்றி பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில் பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது. அமர் < அமரர் = விரும்புவோர், தே < தேவர் = இனியவர். புகார் அமரர் காக்கும் நகரமாக விளங்கியது. அதன் நற்பெயர் என்றென்றும் விலகிச் செல்வதில்லை.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் 185
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும். 190
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்  


கடல்-வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு-மூட்டை, வடமலையில் பிறந்த மணி, குடமலையில் பிறந்த சந்தனம், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை-காவிரிப் படுகை விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம்-பர்மா)ச் செல்வம் இப்படிப் பல சிறியனவும், பெரியனவுமாக மண்டிக்கிடப்பதுதான் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த துறைமுகத் தெருக்கள் - போர்க்குதிரை - கடல் வழியே இறக்குமதி செய்யப்பட்டவை, மிளகு மூட்டை - தரைவழியே வண்டிகளில் வந்தவை, மணி, பொன் - வடமலைப் பகுதியிலிருந்து வந்தவை, சந்தனம் - மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை, அகில் - மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை, முத்து - பாண்டியரின் தென்கடலில் பிறந்தது, பவளம் - சோழ நாட்டுக் குணகடலில் பிறந்தது, வாரி (விளைச்சல் வருவாய்) - கங்கைச் சமவெளியிலிருந்து வந்தவை, பயன் (விளைச்சலை விற்று வந்த பயன்) - காவிரிப் படுகை விளைச்சலை விற்றுப் பெற்றவை, உணவு (பதப்படுத்தப் பட்டவை) - ஈழத்திலிருந்து வந்தவை, கலையாக்கச் செல்வம் - காழகம் = கடாரம் = பர்மாவிலிருந்து வந்தவை, தலைமயங்கல் = ஒழுங்குபடுத்தப் படாமல் இடம்மாறிக் கிடத்தல். இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய பொருள்களும் விலைமதிப்பு மிக்க பெரும் பொருள்களும் புகார் நகரின் வளமாக, அங்குமிங்குமாக எங்கும் ஒன்றோடொன்று மயங்கி முறைப்படுத்தப் படாமல் கிடந்தன.
வணிகர்களின் வாழ்க்கை முறை


நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிதுதுஞ்சிக் 195
கிளை கலித்துப் பகைபேணாது
வலைஞர்முன்றில் மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை மாவீண்டவும்


வலைஞர் முற்றத்தில் மீன், விலைஞர் பட்டிகளில் குதிரை பெருகிக் கிடக்கும் நிம்மதியான வாழ்க்கை. நீருக்கிடையே நாவாயிலும் தூங்கலாம். நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தூங்கலாம். என்று விரும்பிய இடத்தில் இன்பமாக நாட்டு மக்கள் உறங்கினர். சுற்றம் செழித்தது. பகையைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. வலைவீசுவோரின் நீர் முற்றத்தில் மீன்கள் மிகுதியாகப் புரண்டன. குதிரை விற்போரின் குடிசைப் பகுதியில் நாவாயில் வந்து இறங்கிய குதிரைகள் பெருகின.

கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 200
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்


குடிமக்களுக்கு நிம்மதி எங்கிருந்து வந்தது? அவர்களின் வாழ்க்கைப் பாங்கிலிருந்து வந்தது. வாழ்க்கைப் பாங்கு எப்படி இருந்தது? கொலைத்தொழிலை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். களவுத்தொழிலை அவர்கள் இல்லாமல் செய்துவிட்டார்கள். தேவர்களைப் பேணிப் பாதுகாத்தனர். தேவர்களுக்கு வேள்வி உணவை ஊட்டினர். பால்மாடுகள் மட்டுமல்லாமல் காளைமாடுகளையும் அவர்கள் பேணிவந்தனர். நான்மறையாளர்களின் புகழைப் பரப்பினர். பசித்தவர்களுக்கு உணவு படைக்கும் போது சுட்ட பலகாரங்களையும் சேர்த்துப் படைத்தனர். இப்படியெல்லாம் வாழ்வதுதான் புண்ணியம் என்று கருதினர். இப்படிப்பட்ட வாழ்க்கையில் முட்டுப்பாடு இல்லாமல் பிறருக்கு ஈரநிழல் தந்து வாழ்ந்து வந்தனர்.

கொடுமேழி நசையுழவர் 205
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாத 210
பல்பண்டம் பகர்ந்துவீசும்


வணிகர் அறம் - உழவரின் ஏரில் இரண்டு மாடுகள் பூட்டிய நுகத்தின் நடுவில் இருக்கும் பகலாணி போல நடுவுநிலை கொண்ட நன்னெஞ்சோடு வணிகர்கள் வாணிகம் செய்தனர். தமக்குப் பழி வந்துவிடுமோ என்னும் அச்சத்தோடு சொன்னசொல் மாறாமல் வாய்மையையே பேசினர். தாம் கொடுக்கும் பொருளையும், தாம் பிறரிடமிருந்து விலையாக வாங்கும் பொருளையும் ஒத்த நிறையுடையதாகக் கருதினர். எனவே மதிப்புக்கு அதிகமாக வாங்குவதோ, குறையாகக் கொடுப்பதோ அவர்களின் வாழ்க்கையில் இல்லை.

தொல்கொண்டித் துவன்றிருக்கைப்  


பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்


பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு 215
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்


வேறு வேறு மொழி பேசும் மக்கள் கலந்து உறவாடிக் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர் - ‘தொல்கொண்டி’ என்பது மூதாதையரிடமிருந்து பெற்ற செல்வம். இவ்வகையில் செல்வம் பெற்று வாழும் பல்வேறு ஆயத்தார் ஊரில் ஒன்றாகப் பழகி வாழ்ந்து வந்தனர். என்றாலும் அவர்கள் செல்வ நிலையில் வெவ்வேறு உயர்வுகளைப் பெற்றிருந்தனர். இப்படிப்பட்டவர்கள் விழாக் கொண்டாடும் ஊருக்கு ‘முதுவாய் ஒக்கல்’ என்று போற்றப்படும் புலவர், பாணர், கூத்தர் முதலானோர் சென்று கூடியிருப்பது போல. புகார் நகரத்தில் பல்வேறு மோழிகளைப் பேசும் மக்கள் வந்து தங்கிப் போய்க்கொண்டிருந்தனர். பன்மொழி பேசுவோரில் குற்றமற்ற சிலர் புகார் மக்களோடு கலந்து இனிமையாகத் தடையின்றிப் பழகி வாழ்ந்து வந்தனர். இதுவரையில் புகார் நகரத்தைப் பாடிய புறப்பொருள் பற்றிய புறத்திணைப் பாடல் இங்கு அகத்திணையாக மாறுகிறது.

 


தலைவனது அவல நிலை

முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் 
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் 220


நெஞ்சே! இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமே எனக்குக் கிடைப்பதாயினும் என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன் என்கிறான், தலைவன் . இச்செய்திதான் பாட்டின் பயனிலை - பொருளும் அருளும், கலையும் காமமும், வளமும் மகிழ்வும் மலர்ந்து முட்டுப்பாடின்றி மண்டிக் கிடக்கும் புகார்ப் பட்டினமே கொடையாகவோ உழைப்பின் வழியாகவோ பெறுவதாக இருந்தாலும், நெஞ்சே! நான் சொல்வதைக் கேள்! நீண்ட கூந்தலையுடைய இந்தப் பெண்ணாகிய என்னவளைத் தனியே விட்டுவிட்டுப் பொருள் தேட உன்னுடன் வரமாட்டேன். பொருளையும் இவளையும் நினைக்கும் நெஞ்சே! நீ வாழி!

திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை


கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் 225
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழினெய்திப்  


கரிகாலன் அரசனானது - வரிப்புலிக்குட்டி கூட்டில் வளர்ந்தது போல் திருமாவளவனின் இளமைக் காலம் அமைந்திருந்தது. குழியில் விழுந்த ஆண்யானை குழியின் கங்குக்கரையைச் சரித்து இடித்துக்கொண்டு மேடேறித் தன் பெண் யானையோடு சேர்ந்தது போல் திருமாவளவன் தன் ஆட்சியைப் பெற்றான். நுட்பமாக எண்ணிப் பார்த்துப் போரிடத் துணிந்தான். பகைவர் செறிந்திருக்கும் கோட்டையை முற்றுகையிட்டு அவர்களுடன் வாளேந்திப் போரிட்டுத் தனக்கு உரிமையாகிய தாய ஆட்சியைப் பெற்றான். இது அவனுக்குக் கிடைத்த முறையான ஊழ்வெற்றி.

பகைவர்மேல் போருக்கு எழுதல்

பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் 230
உகிருடை யடிய ஓங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்


கரிகாலனுக்கு அரசு போர் வெற்றியால் கிடைத்தது - அரசுத்தாயம் பெற்ற மகிழ்வோடு திருமாவளவன் அமையவில்லை. அவனை அழிக்க முற்பட்டோரின் அரண்களைத் தொலைத்தான். வளவனின் யானை அவனது பகைவரின் முடிபுனைந்த தலைகளைத் தன் முன்னங்கால் நகங்களால் புரட்டியது. பகைவரின் யானை, புரவி, வயவர் அனைவரும் வீழ்ந்தனர். பெயர் விளக்கம் : கரியின் காலால் வளம் பெற்ற வளவன். அதனால் கரிகாலன் எனப்பட்டான். மா = கரிமா = யானை, திருவை மாவால் பெற்ற வளவன் = திருமாவளவன். சான்று இங்குக் கூறப்பட்டுள்ள யானைப்போர்.

பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் 235


உழிஞைப் பூவைச் சூடி நாடு விரிவாக்கப் போரில் ஈடுபட்டான் - திருமாவளவன் உழிஞைப் பூச் சூடிப் போருக்கெழுந்தான். உழிஞைப் பூவுடன் பல்வேறு பூளைப் பூக்களையும் சேர்த்துச் சூடியிருந்தான். இவன் போருக்கெழுந்ததும் ‘நல்ல இரை பெறலாம்’ என்று எண்ணி வானத்தில் பருந்துகள் உலா வந்தன. யானைமீது சென்ற இவன் பெரிய பாறாங்கல் போலவும், பருந்துகள் பறந்தது பாறாங்கல்லில் படரும் பல்வேறு கொடிகள் போலவும் இருந்தன.

பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை எடுப்பி  


போர்முழக்கம் வெற்றிக்குப் பின்னர் தண்ணோசை முழக்கமாக மாறியது - இவனது காவல் முரசம் பேயின் கண்போல் இருந்தது. அதன் அகன்று விரிந்த பெரிய வாயில் எழுந்த முழக்கம் மலைப்பாறைகளில் எதிரொலித்தது. கரிகாலன் பகைவரின் முனைப்பைக் கெடுத்து முன்னேறினான். முன்னின்ற போராளிகளைத் திரியை முறுக்குவது போலச் சுழற்றி முறுக்கினான். வெற்றிக்குப் பின் தன் வெற்றிமுரசை மக்களுக்குக் குளுமை தரும் ஓசையுடன் [தண்பனை] முழக்கினான்

பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்


வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீட 240
மாவிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவிய மயங்கி நீரற்று
அறுகோட் டிரலையொடு மான்பிணை உகளவும் 245


பகைவர் நாட்டுப் பாழ்நிலை – வளவயல் மாற்றம். கரிகாலன் வெற்றிக்கு முன் இவன் வென்று அழிப்பதற்கு முன் பகைவரின் நாடு வளமுடன் செழித்திருந்தது. வயல்களில் கரும்பும் செந்நெல்லும், வாவிகளில் குவளையும் நெய்தலும், பொய்கையில் முதலைகள் என்று அதன் செழுமை இருந்தது. கரிகாலன் வெற்றிக்குப் பின் இவனது வெற்றிக்குப் பின் வயல்களும் வாவிகளும் நீரற்று நிலம் மயக்கமுற்று (திணைமயக்கம் எய்தி) வறண்ட நிலத்தில் பூக்கும் புதவம் பூக்களும் செருந்திப் பூக்களும் பூக்கும் நிலையைப் பெற்றன. மக்கள் பயிர் செய்த நிலைமை மாறிக் கலைமான்களும் காட்டுமான்களும் விளையாடும் காடாக மாறியது.

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப 250
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவும்


பகைவர் நாட்டுப் பாழ்நிலை, மக்கள் மன்றத்தில் மாற்றம், கரிகாலன் வெற்றிக்கு முன் - இவனது வெற்றிக்கு முன் பகைவர் நாட்டில் அந்தி நேரம் வந்ததும் கொண்டி மகளிர் ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஊர்மன்றத்தை மெழுகிப் பூ வைத்து அங்கிருந்த தூணில் விளக்கேற்றினர். அவர்களும் அங்கு வரும் புதியவர்களும் மன்றிலிருந்த கந்திற் பாவையைத் தொழுதனர். கரிகாலன் வெற்றிக்குப் பின்- வழிபட்ட அந்தத் தூண்கள் இவனது வெற்றிக்குப் பின் வெறுங் கல்லுத் தூணாக மாறியது. களிறும் பிடியும் புணர்ச்சிக்காலத்தில் அதில் உரசிக்கொள்ளும்படியும், உறைவிடங்களாகக் கொள்ளும்படியும் ஆயிற்று.

அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக் 255
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும 260


பகைவர் நாட்டுப் பாழ்நிலை – தெருநிலை மாற்றம் கரிகாலன் வெற்றிக்கு முன் - அப்போது தெருவில் எப்போதும் விழாக்கொண்டாட்டம். தெரு வாசலில் பூக்களைத் தூவி மக்கள் முதுவாய்க் கோடியரை வரவேற்பர். முதுவாய்க் கோடியரின் யாழிசையும் முழவொலியும் தெருவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை மக்கள் கேட்டு மகிழ்வர். கரிகாலன் வெற்றிக்குப் பின் - இப்போது விழாத்தெருக்கள் பேய்மன்றங்களாக மாறிவிட்டன. பூத் தூவிய இடங்களில் நெருஞ்சிமுள் பூத்துள்ளது. அருகம்புல் பம்பிக் கிடக்கிறது. யாழொலி கேட்ட இடத்தில் குள்ளநரி ஊளையிடும் ஓசை கேட்கிறது. அழுகையொலி, கூகையின் குழறல், ஆண்டலையின் அழைப்பு, பிணம் தின்ற கூளிகள் அசைபோடும் அதவல், பிணம் தின்னும் பேய்மகளின் பித்தாட்டம் போன்றவை நிகழ்ந்தன.

கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில்
ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக் 265
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப்


பகைவர் நாட்டுப் பாழ்நிலை, வாழ்விடங்களில் மாற்றம், கரிகாலன் வெற்றிக்கு முன் - அன்று விருந்தூட்டிய வீடுகள், கிளி மிழற்றும் காப்பிடங்கள், வளைவுக்கால் அமைக்கப்பட்ட மாடி வீடுகள், (arch entrance) அதில் சோற்றுச் சமையல் மணக்கும் அட்டில் சுவர். விருந்தூட்டிய பின் மிஞ்சிக் கிடக்கும் சோற்றை வளைவு வாயிலில் வைத்துக்கொண்டு வழங்கக் காத்திருந்த நல்ல இல்லங்களின் உயர்திணைப் பண்பு. அவ்விடங்களில் வளர்ப்புப் பச்சைக் கிளிகள் விருந்தினரை அழைக்கும் மழலைமொழி. மழலை மொழிக்குக் கைம்மாறாகப் பால் ஆர்த்தும் பாவையர் நிலை. கரிகாலன் வெற்றிக்குப் பின் - அந்த இடங்களில் பாலைநிலத்து எயினர்களின் நடமாட்டம். செருப்பை வெளியில் கழற்றிவிட்டு அன்று நுழைந்த இல்லங்களில் இன்று அவர்கள் செருப்புக் காலோடு நடமாடுகின்றனர். அன்று கிளி மழலை கேட்ட இடங்களில் இன்று கூகையின் குழறல் ஒலி பகலிலேயே கேட்கிறது. உடுக்கடிக்கும் துடிப்பறை கேட்கிறது. அன்று விருந்தூட்டிய இடங்களில் இன்று கொள்ளையடித்த உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அன்று காவலரின் காப்பகம், இன்று மேவலரின் (வேண்டாதவர்களின்) விளையாட்டிடம்.

திருமாவளவனது ஆற்றல்


மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்


பகைவரின் அச்சம் - இப்படித் திருமாவளவன் பகைவர் நாட்டைப் பாழாக்கியும் நிறைவு கொள்ளாமல் மேலும் போருக்கெழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ‘இவன் மலையை வேரோடு தோண்டி எறிந்து விடுவான். கடலைத் தூர்த்து விடுவான். வானத்தை மண்ணில் விழச் செய்து விடுவான். காற்றின் திசையை மாற்றி விடுவான்’ – என்றெல்லாம் எண்ணிக்கொண்டு பகையரசர்கள் கலங்கினர்.

தன்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லரு வாளர் தொழில் கேட்ப 275
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்
மாத்தனை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப 280
புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்  


பகைவர் தோல்வி - ஆற்றில் விரும்பிய துறையில் குளிப்பது போலத் திருமாவளவன் தான் விரும்பிய நாட்டின்மீது போர் தொடுத்தான். அதனால் அவனிடம் பகை கொள்ளாத அரசர்களும் அவன்பால் சாய்ந்தனர். ஒளியர் - ஒளியர்குடி அரசர் பலர் பணிந்து ஒடுங்கினர். ஒளியர் பல்வேறு இடங்களில் வாழ்ந்தனர். ‘மலங்கே’ என்று தாலமி குறிப்பிடும் பாசூர் நாகர் ஒளியர் எனப்பட்டனர் என்று கனகசபை பிள்ளை ‘the Tamils 18 hundred years ago” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அருவாளர் - அருவாளர் குடி அரசர்கள் திருமாவளவன் சொன்னதெல்லாம் கேட்டு நடந்தனர். மாவிலங்கை நகரைத் தலைநகராகக் கொண்டும் எயிற்பட்டினத்தைத் துறைமுகமாகக் கொண்டும் குடியினர் இவர்கள். கனகசபை பிள்ளை “The Tamils 18 hundred years ago” என்னும் நூலில் அருவாளர் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார். வடவர் வாடினர் - குடவர் சோர்ந்து குறுகியிருந்தனர். குடவர் என்போர் குடநாட்டுச் சேரர். தென்னவன் திறமை செல்லுபடி யாகவில்லை. தென்னவன் என்பவன் பாண்டியன். இருங்கோவேள் பாண்டியர் சார்பு நிலையை விட்டுத் திருமாவளவனின் சார்பை உண்டாக்கிக் கொண்டான். இவன் பாரி மகளிரை மணந்து கொள்ள மறுத்தவன். - புறம் 201 202. மன்னர்களின் கோட்டைகளை இடிக்கும் வலிமை கொண்ட பெரும்படை இவனிடம் இருந்தது. அதன் துணையுடன் திருமாவளவன் தன் சிவந்த கண்ணின் சினப்-பார்வையை வீசினான். பொதுவர் - அதனைக் கண்ட பொதுவர், கால்வழியே இல்லாமல் அழிந்துவிட்டனர். பொதுவர் என்போர் பொதியில் என்றும், பொதுமீக்கூற்றம் என்றும் (பொதியில், பொதுமீக் கூற்றம் – ஆய் நாடு – புறம் 135) போற்றப்படும் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பொதியமலைப் பகுதியில் ஆண்டுகொண்டிருந்த ஆய்குடி மக்கள். ஆ < ஆய் < ஆயர் = பொதுவர் (காண்க முல்லைக் கலி)

சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்


காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் 285
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇ
பொருவேமெனப் பெயர்கொடுத்து


வளவன் தன் நாட்டைத் திருத்தியது - காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றினான். மழைநீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தைப் பெருக்கினான். உறையூரில் புதிய கோட்டையைக் கட்டினான். அதில் அலுவலரைக் குடியேற்றினான். வாயில், பதுங்கும் புழையறை, மதில் மேலிருந்து அம்பு எய்யும் ஞாயில், அதன் அருகில் படைக்கலப் புதையல் வைக்கும் புதையிடம் போன்ற அமைப்புகளைக் கோட்டையில் நிறுவினான். ‘போரிடுவேன்’ என்று தன்னைப் பறைசாற்றிக் கொண்டான்.

ஒருவேனெப் புறக்கொடாத 290
திருநிலைஇய பெருமன் னெயில்
மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும் 295
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்


திருமாவளவன் தான் வென்ற பகைவரின் முடிப் பொன்னால் கழல் செய்து தன் பிள்ளைகளுக்கு அணிவித்து, அவர்கள் ஓடியாடுவதைக் கண்டுகளித்தான் - வளவன் போருக்கு எழுந்தபோது வேறு எந்த மன்னரையும் கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை. ஒருவனாகவே போரிட்டு வெற்றி கண்டான். செல்வ வளம் மிக்க இவனது கோட்டை புகழ் மின்னலை வீசியது. அதனால் பிற மன்னர்களின் புகழ் மங்கிப் போயிற்று. முரசு முழங்கும் பெருமை வாய்ந்த பகைவேந்தர் தம் முடியில் அணிந்திருந்த மணிகளைப் பறித்து வளவனின் புதல்வர் காலில் அணிந்திருந்த கழலுக்குள் ஒலிக்கும் மணியாக்கி மகிழ்ந்தனர். அவனது புதல்வர்கள் அந்தக் கழலொலி கேட்க ஓடியாடி விளையாடினார்கள். ‘முற்றிழை’ என்பது தாலி. திருமாவளவன் தன் முற்றிழை மனைவியரின் மார்பில் மகிழ்ந்து திளைத்தான். அப்போது மனைவியரின் மார்பிலிருந்த செஞ்சாந்து சிதைந்து இவன் மார்புச் சந்தனத்தைச் சிதைத்தது.




தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்

அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய  
வேலினும் வெய்ய கானமவன் 300
கோலினுந் தண்ணிய தடமென் தோள.  


திருமாவளவனின் வேலும் கோலும் - திருமாவளவன் சிங்கம்போல் பகைவர்களைத் தாக்கி வெல்லும் திறம் கொண்டவன். திருமாவளவன் பகைவர்களைச் சாய்க்க ஓங்கிய வேல் போல் பொருளுக்காக நீ பிரிந்து செல்ல விரும்பிய கானம் சுட்டெரிக்கும் வெம்மை உடையது. திருமாவளவன் தன் குடிமக்களுக்கு வழங்கும் குளுமைத்தண்மை போல் என்னவளுடையவளின் விரிந்த தோள் குளுகுளுக்கும் தண்மை உடையது. (கோ <= கோல் <= கோன் <= கோமான் = தலைவன்) முடிவ - ு தண்ணிய தோளைப் பிரிந்து ‘வயங்கிழை ஒழிய வாரேன் நெஞ்சே’ (அடி 200) என்கிறான் கிழவன் (கிழவன் = கிழத்தி ஒருத்திக்கு உரியவன்).

         பட்டினப் பாலை முற்றும்.

Popular posts from this blog

சங்க இலக்கியம் - II அலகு - 4 சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியம் - I அலகு - 5 புறநானூறு ( 10 பாடல்கள் )