சங்க இலக்கியம் - I அலகு - 3 கலித் தொகை
கலித் தொகை
முல்லைக் கலி
( 1 - 10 பாடல்கள்)
பாடல் - 1
கார் மழை பொழிந்து ஈரம் பட்டிருக்கும் நிலத்தில் முன்பு காய்ந்திருந்த புதர்களில் அரும்பு விட்டுப் பூத்த பிடவம், கள்ளுண்டு கிடப்பவன் போல நிலத்தைத் தடவிக் கொண்டு துடுப்புப் போன்ற இதழ் கொண்ட தாய் முறுக்கிக்கொண்டு பூத்திருக்கும் கோடல், மணி நிறத்தில் பூத்திருக்கும் காயா, மற்றும் சில வகைப் பூக்களையும் கண்ணியாகக் கட்டித் தலையில் அணிந்து கொண்டு மைந்தர் புகுந்தனர். மைந்தர்களை மாறுகொண்டு தாக்கித் தம் வலிமையை நிலைநாட்டக்கூடிய காளைகள் சிவபெருமானின் கணிச்சிப் படைபோல் கொம்பு சீவப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் தொழுவத்தில் சேர்ந்தாற் போலப்
புகுந்தனர்.
அந்த இடத்தில் முழக்கமா, இடியா என்னும் படி பறைகள் முழங்கின. அது வழக்கத்துக்கு மாறாகப் போர்க்களம் போலக் காணப் பட்டது. காளைகளை வளர்த்த மகளிர் (நல்லவர்) மணக்கும் பொடித்துகள் களையும், மணக்கும் புகைகளையும் ஏந்திக்கொண்டு அணிவகுத்து நின்றனர்.
கன்னித் தெய்வம் இருக்கும் நீர்த்துறை யையும், சிவன் தவமிருக்கும் ஆலமரத்தை யும், திருமாலுக்கு உரிய மரா மரத்தையும் போற்றி வணங்கிய பின்னர் மைந்தர் தொழுவத்துக்குள் புகுந்தனர்.
மேலே சுற்றும் நூல்கண்டு நிறத்தில் உடம்பும் சிறிய சிவந்த கண்ணும் கொண்ட காளை ஒன்று தன்னை நோக்கி அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை (இடையனை) சாகும் அளவுக்குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக்கொண்டு சுழற்றுவதைப் பாருங்கள்.அழகிய சீரான நடையழகி திரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளப்பேன் என்று பகைவர்களுக்கு இடையே வஞ்சினம் கூறியவன் வீமனைப்போல் அது உள்ளது.
கதிரவன் தோன்றுவது போன்ற நெற்றிச் சுழி கொண்ட காரிக் காளை விடரிப்பூ அணிந்துகொண்டு வந்த பொதுவனைச் சாய்த்து அவன் குடல் சரியும்படி அவனைக் குலைப்பதைப் பாருங்கள்.படரும் அந்தி நிறம் கொண்ட சிவபெருமானாகிய பச்சைக் கண் கொண்ட கடவுள் தன்னை இடரிய எருமைப் கடாவின் நெஞ்சைப் பிளந்து தன் கூளிப் பேய்களுக்கு உணவாகத் தருபவன் போல் இது காணப்படுகிறது.
காதோரம் வெள்ளை நிற மின்னலும், பொறி போன்ற வெள்ளை நிறமும் கொண்ட காளை தன் சினத்துக்குகு அஞ்சாமல் தன் மீது பாய்ந்த பொதுவனைத் தாக்கி கூர்மையான தன் கொம்பால் அவனைச் சின்னாப்பின்னம் செய்வதைப் பாருங்கள். இருள் எனவும் எனவும் எண்ணாமல் இரவு வேளையில் வந்து தன் தடையை மீறித் தன் தந்தையைக் கொன்றவனின் தோளைத் திருகி எறிந்தவன் அசுவத்தாமனைப் போல இந்ததக் காளை செய்கிறது.
என்றல்லாம் சொல்லும்படி ஏறு தழுவுதல் நடைபெற்றது.
தன் கழுத்தில் மாலை அணிவிக்கக் கூடிய கணவனை மகளிர் தேர்ந்தெடுப்பதற்காக இந்த ஏறு தழுவல் நடைபெற்றது.
இதனை அறிவிக்க முதல் நாள் மாலையில் ஆயர் குழல் ஊதினர்.
ஆண்யானையைக் காட்டிலும் அஞ்சாக் கண் கொண்ட இந்தக் காளையை விடாமல் நீ பற்றிச் சென்றால், இந்த ஆயமகள் உனக்குத் தன் படுக்கையை விரிப்பாள். ஒருத்தி சொல்கிறாள்.
பகல் போல் ஒளி வீசும் கண்ணியைத் தன் குழலில் சூடியும், கையில் கோல் வைத்துக்கொண்டும் கொல்லும் காளையைப் போராடி வென்றவனுக்கு என் கூந்தலை மெத்தையாக்கித் தருவேன். ஒருத்தி சொல்கிறாள்
"காளையைப் பிடிப்பதில் எனக்கு ஒப்பானவர் யாரும் இல்லை" என்று சொல்லிக்கொண்டு நம் பசுக் கூட்டத்தில் புகுந்து தன் செயல் திறத்தை வெளிப் படுத்தும் பொதுவனுக்கு நான் உறவுக்காரி ஆகாமல் போகமாட்டேன். அவனைக் காண்பதற்கு உதவியாகத்தான் என் காளையுடன் என் கண்ணையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருத்தி சொல்கிறாள்.
இப்படி நடந்த காளைப் போரில் காளை களும் வருந்தின. ஆயர்களும் புண் பட்டனர். மணக்கும் கூந்தலுடன் பொதுவர் மகளிர் எல்லாரும் முல்லை பூத்த காட்டுப் பூங்காவுக்கு வந்தனர். பொதுவர் குல ஆண்களோடு புணரக் குறி காட்டினர்.
பாடல் - 2
விரிந்த வானம் மழை பொழிந்திருக்கிறது. குளுமையுடன் மணக்கும் பிடவம், கொடி படர்ந்து தவழும் தளவம், வண்ணம் காட்டும் தோன்றி, கொத்துக் கொத்தாக விளங்கும் கொன்றை ஆகியவை போன்ற பல மலர் களால் தொடுக்கப்பட்ட மாலையாகவும், அணிகலன்களாகவும் தைத்துப் தைத்து அணிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் திளைத்து விளையாடும் ஆயத்து மகளிருள் என் உயிரில் தன் உடம்போடு புகுந்திருக்கும் இவள் யார்?
ஓ இவளா? போரிடும் காளையைக் கைப்பற்றுபவரை அல்லாதவரைத் தன் p0p0திருமகள் போன்ற மாமை நிற உடம்பால் தீண்டமாட்டாள் என்று எல்லாருக்கும் தெரியும்படிப் பறை மீண்டும் மீண்டும் சாற்றப்பட்டும், எப்போதும் சொல்லப் பட்டும் வளர்ந்து வருபவள் சுற்றத்தார்க்குத் தலைவன் செய்தி சொல்லி அனுப்ப, அவர் , 'ஏறுதழுவும் விழாவிற்குப் பறைஅறைக!' எனல் எலாருக்கும் சொல்லுங்கள்.
இசை முழங்கட்டும். பறை அறைந்தும் சொல்லுங்கள். "இவளுக்குத் திருமண விழா" என்று சொல்லுங்கள்.
திருமணத்திற்காக ஏறு தழுவும் விழா நடைபெற்றது. பார்க்குமிடமெல்லாம் விழாக் கோலத்துடன் மகளிர் கண் பூத்துப் பார்த்துகொண்டிருந்தனர்.
காளையின் மேல் பாய்ந்து பிடிப்பதற்காக, காளை மேல் பாய்வோர் பலர் ஆரவாரத் துடன் காளைக்கு எதிர் எதிர் சென்றனர்.
கொல்லும் வில்லைப் போல வளைந்து காளைகள் சினத்துடன் மேல் எழுந்து ஓடிப் பாய்ந்தன. காளைகளால் மண்ணின் துகள் எழுந்தது.
பொதுவர் தம் மார்பினை முன்னிறுத்திப் பாய்ந்தனர். காளையின் கொம்புகள் முட்டுவதற்காகக் கவிழ்ந்தன. அது கண்டு பலர் கலங்கினர்.
அவர்களுள் ஒருவன் மலரும் மகிழ்வுடன் மணிப்பூண் அணிந்த தன் தோள்களால் காளையின் இமிலை வளைத்துப் பிடித்துக் கொண்டு தோன்றினான். காளையை வருத்தினான்.
அப்போது அந்தக் காளைபடும் துன்பத்தைக் கண்ட மகளிர் இவனுக்கு பகை ஆவரோ? இந்தப் பழக்கம் கொண்ட ஆயர் மடையர். நேற்று நடந்த போரில் ஒரு காளை ஒரு பொதுவனைக் கொன்றது. இது தெரிந்தி ருந்தும் இன்றும் அந்தக் காளையைத் தழுவிப் போரிட்டு வெல்லும்படி எறுகோள் விழா எனப் பறை சாற்றிக் காளையை விட்டிருக்கின்றனர்.எது எப்படி இருந்தாலும் இன்று ஒரு பொதுவன் (இடையன்) காளையை அடக்கிவிட்டான். அதனால் திருமண விழாவுக்கான தண்ணுமை முரசு முழங்கிற்று.
அந்த முழக்கத்துடன் எல்லாரும் சேர்ந்து குரவை ஆடினர். காளையை வளர்த்தவள் அடக்கிய பொதுவனைப் பார்த்துப் புன்னகை பூத்தாள். அவளது தோளையும் அவனையும் அந்தச் சிறுகுடி மக்கள் பாராட்டிப் பேசினர். எங்கும் மகிழ்ச்சி.
பாடல் - 3
மலையிலும், காட்டிலும் மணம் பரப்பும் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, தளவு, குல்லை, கோடல், பாங்கர் முதலான பூக் களைப் பொதுவர் (இடையர்) கண்ணி யாகக் கட்டித் தலையில் சூடிக்கொண் டனர்.
பலவகை ஆனிரைகளை மேய்க்கும் பொதுவர் சினம் கொண்ட காளைகளைப் பிடிப்பதைக் காண்பதற்காக மகளிர் திரண்டு வந்தனர்.
அவர்கள் முல்லைப் பூ, முல்லை மொட்டு, முல்லை அரும்பு போன்ற பற்களை அடுக்கி வைத்தது போன்ற பற்களைக் காட்டிச் சிரித்துக்கொண்டு, கண்கள் பெருமழை பொழிவது போலப் பார்த்துக்கொண்டும், வாயிலிருந்து வரும் சொற்கள் மடப்பத் தன்மையை உதிர்ப்பன போலப் பேசிக்கொண்டும் குழை அணிந்த காதினராக அந்த நல்லவர் திரண்டனர்.
நல்லவர் திரண்டதும் ஏறு தழுவும் போர் நடைபெற்றது.
நீல நிற மலை மேல் வெண்ணிற அருவி இறங்குவது போல் கால் மட்டும் வெள்ளை யாக இருக்கும் ஒரு காளை அந்தி வானத்தில் மீன் பூத்திருப்பது போல உடம்பில் புள்ளிகளை உடைய ஒரு வெள்ளைக் காளை கொலைத்தொழில் புரியும் சிவபெருமான் பிறைநிலாவைச் சூடியிருப்பது போல வளைந்த கொம்புடன் அழகுறத் தோன்றும் செவலைக் காளை (சிவப்புக் காளை) இப்படிப் பல காளைகள் ஏறு தழுவும் "தொழூஉ"வில் நிறுத்தப் பட்டன. போரிடும் வலிமை மிக்க சிங்கம், குதிரை, யானை, முதலை முதலானவை தண்ணீர் நிற்கும் பாறைப் பிளவில் திரண்டிருப்பதுபோல நிறுத்தப்பட்டிருந்தன.
அந்தத் தொழுவம் மழை மேகங்கள் தவழும் மலை போல் காணப்பட்டது. அந்தத் தொழுவத்துக்குள் காளையை அடக்கும் பொதுவர் சுழன்று சுழன்று பாய்ந்தனர்.
அவர்களை அந்தக் காளைகள் தெரிந்து தெரிந்து குத்தின. அவற்றின் கொம்புகளில் சுற்றப்பட்டிருந்த மாலைகளைப் பொதுவர் அறுத்தனர்.
சூலம் ஏந்திய சிவபெருமான் சூடியிருக்கும் பிறைநிலாவில் மாலை இருப்பது போல ஒரு காளை தன் கொம்புகளில் பொதுவன் ஒருவனின் குடலைச் சுற்றிக்கொண்டு சுழன்றது.
பட்டம் விட்டு விளையாடுபவர் ஒருவர் விடும் பட்டத்தின் நூலை மற்றொருவர் தன் பட்ட நூலால் அறுப்பர். அது போல ஒரு காட்சி.
ஒரு காளை ஒருவனைக் குத்தி அவன் குடரைக் கொம்புகளில் சுற்றிக்கொண்டது. அந்தக் குடரை அவன் திரும்பப் பெறப் போராடினான். அது பட்டத்து நூலை அறுப்பது போல இருந்தது.
தோழி, இதனைப் பார். இவன் ஒருவன் மாடு மேய்க்கும் இடையன் போலத் தென்படுகிறான். காளையின் பிடரியில் தத்தி ஏறிவிட்டான். போராடுகிறான். திரும்பி வரத் தெரியவில்லை.
தோழி, இதனைப் பார். இவன் ஒருவன் பசுக்களை மேய்க்கும் இடையன் போல் தென்படுகிறான். மறைநிறக் காளையின் மேல் இருந்துகொண்டு ஆற்றுத் துறையில் அம்பிப் படகில் செல்பவன் போலக் காணப்படுகிறான்.
தோழி,இதனைப் பார். காரிக் காளை ஒன்று சினம் கொண்டு காற்றுப் போல வந்தது. அதனை அவன் ஊற்றுநீரைத் தடுப்பவன் போலத் தடுத்து அடக்கிவிட்டான். அதன் மேல் ஏறி அந்தப் பொதுவன் சவாரி வருகிறான். இவனது தகைமையைப் பார். உயிர் வாங்கும் எமன் எருமைக்கடாவின் மேல் வருவது போலக் காடப்படுகிறான். பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது.
தோழி, இது ஒன்றைப் பார். இவன் ஒருவன் ஆடு மேய்க்கும் புல்லினத்து ஆயன் போல் தென்படுகிறான். புள்ளி உள்ள வெள்ளைக் காளை மேல் நிலா மறு தோன்றுவது போல வெள்ளைக் காளையின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கிறான்.
ஓய்வில்லாத வேகத்தோடு உருத்துப் பார்த்துக்கொண்டு சிவந்த காதினை உடைய காளை ஒன்று தன் மேல் பாய வருவது கண்டு காயாம்பூ சூடிய பொதுவன் ஒருவன் ஓடும்படி விரட்டுகிறான். இப்படிப் புலிக்கூட்டம் யானைக் கூட்டத் தோடு போராடுவது போல மாறி மாறித் தாக்கி ஏறு தழுவுதல் நடைபெற்று முடிந்தது.
பொதுவர் தம் காளைகளைத் தொழுவத் திற்குக் கொண்டு சென்று விட்டுவிட்டனர்.
மயில் பிடரி போல் பன்னிற மணிமாலை அணிந்த மகளிர் பயிலும் மலரிதழ் போன்ற கண்களுடன் வர அவர்களுடன் மைந்தரும் சேர்ந்துகொண்டு உடல் திணவோடு ஆனிரைச் சாணம் மண்டிய ஊர் மன்றத்தில் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு "தழூஉ" ஆட்டம் ஆடித் திளைத்தனர்.
கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சு பவனை ஆயர் குலப் பெண் இந்தப் பிறவி யில் மட்டுமன்று; அடுத்த பிறவியிலும் அணைக்க மாட்டாள். கொல்லும் காளையை அஞ்சாமல் பிடித்து ஆள்பவர் அல்லாதவரை வன்னெஞ்சம் கொண்ட ஆயர் குலப் பெண் தழுவ மாட்டாள். தழுவ நேர்ந்தால் நைவர். உயிர் துறந்து மாய்வர். காளையின் கூர்மை யான கொம்புக்கு அஞ்சுபவர் ஆயர் குல மகளின் தோளை அணைப்பது எளிதோ?தம்மை விரும்புபவர் கொல்லும் காளையின் கொம்புகளுக்கு இடையில் பாய்ந்து அடக்குவாராயின், எம் ஆயர் இனத்து மகளிர் தம்மை மணந்து தம் முலையைத் தழுவ எந்த விலையும் வாங்குவதில்லை.
இப்படி நடைபெறும் ஏறு தழுவல் போரை மரபாகக் கொண்டவர்கள் நாம். இதனை நாம் பாடிக்கொண்டு குரவை தழுவி ஆடுவோம். பாடும்போது தேயாத விழுமிய புகழை உடைய தெய்வத்தைப் போற்றுவோம்.
கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலவுலகினை உரிமை பூண்டு ஆண்டுவரும் எம் அரசன் வாழ்க என்னும், மலர்ந்துகொண்டே இருக்கும் இந்த உலகம் வாழ்க என்றும் போற்றிக்கொண்டு குரவை தழுவி ஆடுவோம்.
பாடல் - 4
ஆயர் தென்னவனாகிய பாண்டியன் குலத் தோடு சேர்ந்து தோன்றியவர். அலை பொங்கியகடல் பாய்ந்தது வந்து தன் மண்ணைக் கொண்டது என்று சற்றும் இரக்கம் காட்டாமல் புலிச் சின்னம் கொண்ட சோழனையும், வில் சின்னம் கொண்ட சேரனையும் வென்று அவர்களின் நாட்டில் தன் கெண்டை மீன் சின்னத்தைப் பொறித்து நாட்டை விரிவாக்கிக்கொண்ட தென்னவன் குடி தோன்றியபோதே தோன்றிய தொன்மையான குடி ஆயர் குடி.
பனை மரக் கொடி உடையவன் பலராமன். அரில்வன் பால் போல் வெள்ளை நிறம் கொண்டவன். அவனைப் போன்ற குற்றமற்ற வெள்ளை நிறம் கொண்ட காளைபோரில் மெம்பட்டு வெற்றிபெறும் பொன்னாலான சக்கரத்தை உடையவனும்,
திருமகளைத் தன் மார்பில் கொண்டவனும்் மான திருமல் போல் கருநிறம் கொண்ட காரிக்காளை
ஒளிமிகுந்து தாழும்சடை கொண்டு விருப்பம் தரும் பிறையை நெற்றியில் கொண்டு விளங்கும் முக்கண் சிவபெரு மான் போல அழல் நிறம் கொண்ட குரால் காளை
மா மரமாக நின்ற சூரனைப் பெரிய கடலே கலங்கும்படி வேலால் வென்ற முருகனின் நிறம் போலச் சிவப்பு நிறம் கொண்ட செவலைக் காளை
அரிய வகையில் போர் புரியும் பண்பு கொண்ட அவற்றையும், பிறவற்றையும் மேகக் கூட்டம் போலக் குவித்து ஏறு தழுவும் தொழுவத்துக்குள் சுழன்று சுழன்று வருமாறு புகுத்தினர்.
அதன் பின், அந்தக் காளைகளைப் பற்றிய செய்தியைப் பறையறைந்து தெரிவித் தனர்.
வெள்ளைக் காளையை அடக்கியவன் முள் போல் பல்லழகு கொண்ட இவளைப் பெறலாம்.
காரிக் காளையின் சினத்துக்கு அஞ்சாமல் போரிட்டு வெல்பவன் இந்த ஒளி மிக்கவளின் வாரி முடித்த கூந்தலில் உறங்கலாம்.
இந்தச் செங்கண் காளையைக் கொள்பவன் மானைப்போல் மருண்டு நோக்கும் இவளைப் பெறலாம்.
மிகுந்த வலிமை கொண்ட இந்தச் சிவப்புக் காளையின் சினத்தை அடக்குபவன் மூங்கில் போன்ற தோள் கொண்ட இவளது தோளில் துயில் கொள்ளலாம்.
இப்படிப் பறையறைந்து சொல்லி மகளிரை ஆயர் முறை முறையாக நிறுத்தினர். அதன் பின்னர் பறை முழங்கியது. பலரும் ஆரவாரம் செய்தனர்.
மைந்தர் பிடிப்பதற்காகக் காளைகள் மணப்புகை முகத்தில் காட்டப்பட்டன. பின்னர் அவிழ்த்து விடப்பட்டன.
அந்தக் காளைகளின் மேல் மைந்தர் மாறுபட்டுப் பாய்ந்தனர். வேல் போன்ற கொம்புகளால் அது குத்துவதைப் பொருட்படுத்தாமல் பாய்ந்தனர்.
ஒருவன் வெள்ளைக்காளையின் பிடரி மேல் பாய்ந்தான். அப்போது இளங் காரிக்காளை ஒன்று அவனைக் குத்தியது. இது பால் போன்ற நிலாவைக் கௌவச் செல்லும் பாம்பினை விடுவிக்கும் நீல நிறக் கண்ணன் செயல் போல அது இருந்தது.
பலர் விலகி ஒதுங்குகையில் ஒரு காளை ஒருவனைக் குத்தித் தன் கொம்பால் அவனது குடர் சரியும்படி இடறியது. இது மணப்புகை எழுப்பும்போது வெகுண்டு ஓடும் கொல்யானை போல் அந்தக் காளை காணப்பட்டது.
காளையைப் பிடிக்கும்போது பிடி நழுவி விழுந்தவனை ஒரு காளை தாக்காமல் விட்டுவிட்டு ஒதுங்கிச் சென்றது. இது வாள் இல்லாமல் நிற்கும் ஒருவனை வீரம் மிக்க மீளி ஒருவன் "இவன் போரிடுவதற்குத் தக்கவன் அல்லன்" என விலக்கிவிட்டுச் செல்வது போல் இருந்தது.
இசை முழக்கத்துடன் காளைமேல் பாய்ந்தும், பாய்ந்த காளையால் குத்துப் பட்டும், காளையின் கொம்புகளுக்கு இடையில் நுழைந்தும் மைந்தர் போராடினர். இந்தப் போர் ஐந்து பேராகிய பாண்டவர் நூறு பேர் துரியாதனன் ஆதியரோடு போராடிய போர்க்களம் போல இருந்தது.
ஏறு தழுவல் போருக்குப் பின்னர் காளைகள் மேய்சல் தரைக்கு விடப்பட்டன. அழகியரும், மைந்தரும் ஊர் மன்றத்தில் ஒருவரை ஒருவர் தழுவிய வண்ணம் தழூஉக் கூத்து ஆடினர்.
தோழி, வருக, போராடிய காளைகளை எதிர்த்துத் தாங்கிக்கொண்ட பொதுவனின் பார்பினைப் பாராட்டிப் பாடிக்கொண்டு நாம் தழூ ஆடலாம். நெற்றிச் சுழி கொண்ட சிவலைக் காளையின் வலிமையை அழித்த வனின் மார்பை நான் அணைக்காமல் விடமாட்டேன். ஊரார் பழி தூற்றுவது பற்றி ஆயர்குடிப் பெண்ணுக்குக் கவலை யில்லை. தோழி, நாம் ஒன்று கூடி ஆடும் குரவையில் அவன் என்னைக் கொல்பவன் போலப் பார்த்தான். "சினம் கொண்ட காளையை நான் தானே அடக்கினேன்" எனச் சொல்லிக் காட்டுவது போன்ற அவன் செருக்கு தக்கதுதான். அவன் ஆயர் குல மகன் அன்றோ? பிடிக்க முடியாத கொலைத் தொழில் மிக்க காளையின் சினத்தைப் பொர்ருட்படுத்தாமல் பாய்ந்து அடக்கிய வனையே நான் மணக்க விரும்பினேன். ஊரார் தூற்றினர். அதனைப் பொருட்படுத் தாமல் என்பெற்றோர் அவனுக்கே என்னைத் திருமணம் செய்துவைத்தனர். என்றல்லாம் நாம் பாடுவோம். தொன்மை யான கதிரொளி வீசும் திருமாலின் சக்கரத் தைப் போற்றிக்கொண்டு குரவை ஆடு வோம். மூழங்கும் முரசம் கொண்ட தென்னவன் (பாண்டியன்) வாய்மை தவறாத ஒருமொழிக் கொள்கையுடன் உலகினை ஆளவேண்டும் எனப் போற்றிக்கொண்டு குரவை ஆடுவோம்.
பாடல் - 5
பாண்டியர் குடி வழியில் தோன்றியவர் ஆயர். பாண்டியர் அரசு அரசர்கள் அழியும் படிச் செய்து ஆண்டவர்கள். முரசு முழங்கும் முதுகுடி அரசர்கள். முரண் மிகு செல்வர் எனப் போற்றப்படுபவர். அவர்களின் தொல்குடிக்கு உரியது கடலில் தோன்றி கடல் நிலத்தில் வளரும் முத்து. "பாண்டியர் தீது இல்லாமல் சிறப்புடன் வாழவேண்டும் என்று உவகைப் பெருக்கில் ஒன்று கூடி வாழ்த்துபவர் ஆயர். அழிவின்றி வாழும் குடி ஆயர் குடி.ஆயர் குற்றமற்ற உள்ளத்தோடு ஒன்று திரண்டனர்.
கூர்மையான முள்-சக்கரம் ஒரு கையிலும், சங்கு ஒரு கையிலும் கொண்டவன் திருமால். அவன் சங்கு போல் நிறம் கொண்டது ஒரு காளை.
ஒரு பக்கக் காதில் மட்டும் குழை அணிந்தவன் அம்மையப்பன். அவனது எரி நிறம் போலச் சிவந்த மறுவினைக் கொண்டது ஒரு வெள்ளைக் காளை.
கணிச்சிப் படை கொண்ட சிவபெருமானின் கழுத்தில் தேங்கிய நஞ்சு போல் தன் திமிலில் மட்டும் குரால் (நீலம்) நிறம் கொண்டது ஒரு காளை.
வச்சிரப் படை கொண்ட இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் இருப்பது போல உடம்பில் புள்ளிகளைக் கொண்டது ஒரு காளை.
வேல் வீசுவதில் வல்ல முருகன் அணிந்தி ருக்கும் வெண்ணிற ஆடை போல் காலில் வெண்ணிறம் கொண்டது ஒரு காளை.
எமனைப் போல வலிமை கொண்டவை பிற காளைகள்.
சிங்கமும், கணிச்சிப் படையும், காலத் தெய்வமும், கூற்றுவனும் தொடர்வது போன்ற காளைகளுடன் போரிட ஆயர் தொழுவத்துக்குள் புகுந்தனர்.
அப்போது இடி முழக்கம் போலப் பறைகள் ஒலித்தன. மேனியிலிருந்து கமழும் மணப் புகையுடன் வெண்மேகம் போல மகளிர் அணி நின்றது.
பொதுவர் தொழுவத்துக்குள்ளே பாழ்ந் தனர். சிலர் காளைகளின் கொம்பைப் பிடித்தனர். சிலர் காளையைத் தன் மார்பில் தழுவிக்கொண்டனர். சிலர் கழுத்தில் தாவினர். சிலர் அதன் கொட்டேறியைப் பிடித்து அடக்க முயன்றனர். சிலர் காளை யின் தோளில் தொங்கினர். இப்படியெல் லாம் அடக்க முயன்றவர்களைக் காளை தன் கொம்புகளால் குத்தித் தடுத்து நிறுத்தியது.
பிடிக்க முயல்பவர்களைத் தன் கொம்பு களால் குத்தி அவர்கள் தன்னைப் பிடிக்க முடியாதபடிக் காளை தடுக்கும் காளை யைப் பார். குறைநாள் இருக்கும்போதே உயிரை கொண்டு செல்ல வந்திருக்கும் எமன் போல அவை பாய்ந்தன.
பெருமிதம் காட்டியவர் சாயும்படி சிவலைக்காரிக் காளை குத்திக்கொண்டு ஆடுவதைப் பார். பூ மலரும் பதம் பார்த்து தும்பி வண்டு அதனை மொய்ப்பது போல் அந்தச் செங்காரிக் காளையின் செயல்பாடு இருக்கிறது.
பிடரியில் ஏறிப் பிடிக்க முயல்பவனைப் பாயும் வெள்ளைக் காளையைப் பார். வெளிச்சம் மிக்க வானத்தில் முழுநிலாவை விழுங்கும் பாம்பின் வாயிலிருந்து தப்பி வெளிவரும் நிலாப்போல அது காணப் படுகிறது
காளைகளும் பொதுவரும் தொழுவத்துக் குள் மோதிக்கொண்டனர். அது இருபெரு வேந்தர்கள் நோதிக் கொள்ளும் போர்க் களம் போலக் காணப்பட்டது.
தன் காளையை அதன் கொட்டேறியைப் பிடித்து அடக்கிய பொதுவனை ஆயர் குலப் பெண் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே யிருந்தாள்.
நல்லவளே! உன் விரிந்த கூந்தலில் முல்லைப் பூ மணப்பதைப் பார்த்து உன் பெற்றோர் உன்னைச் சினத்துடன் பார்க்கின்றனர். பொதுவனைச் சினந்து பாயும் கொல்லேறு போல் ஏன் பார்க்கின்றனர்.
நீண்ட கூந்தலை உடையவளே! கொம்புகளை உடைய மாடுகளை மேய்க்கும் ஆயர் மகனை நாம் தெரிந்தெடுத்தால் நம்மவர்கள் பொறுப்பார்களா? பொறுக்காதவர்கள் தம் கண்களிலிருந்து தீயைக் கக்குகின்றனர்.
அழகிய முகம் கொண்டவளே! என் தாய் என்னை அடித்தாள் என்று ஊரார் என்னைப் பொதுவனோடு சேர்த்துக் கதை கட்டிவிட்டனர்.
ஒள்ளிழை பூண்டவளே! புகர்க்காளை ஆயனுக்கு இன்று என்னைப் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். நானோஅவன் செங்காளையை அடக்கியபோதே என்நெஞ்சை அவனிடம் பறிகொடுத்து விட்டேன்.
இப்படிக் காளைப்போரைச் சொல்லிக் கொண்டு பாம்பணைமேல் பள்ளி கொண்டி ருக்கும் சக்கரத்தானைப் போற்றுவோம். நாடுகள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டு தென்னாட்டை ஆளும் பொதிய மலைத் தலைவன் அருவிகள் பாயும் இமய மலை வரையில் வென்று புகழுடன் விளங்க உதவ வேண்டும் என்று திருமாலைப் போற்றிப் பரவுவோம்.
பாடல் - 6
கழு, தீக்கடைக் கோல் இரண்டையும் தோல் பையில் வைத்துக்கொண்டு,இசை முழக்கும் மண்டைக் கருவியைத் தோளில் உரிக் கயிற்றுடன் மாட்டித் தூக்கிக்கொண்டு,
குழலில் பண்ணிசை பாடிக்கொண்டு,
தம் குழுவினர் பேசும் கொச்சை மொழி பேசிக் கொண்டு, பொதுவர் பசுக்களை மழையில் நனைந்திருக்கும் அகன்ற நிலத்துக்குப் ஓட்டிச் சென்றனர்.
அவ்வழியில் சில காளைகளும் சென்றன.
அவை காலால் புழுதியைக் கிளப்பின.
கொம்பால் மண்ணைக் குத்தின. கத்தி எதிரொலி எழுப்பின. ஒன்றோடொன்று மண்டிப் பாய்ந்துகொண்டன.
போர்க்களத்தில் மள்ளர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போலத் தாக்கிக் கொண்டன.காளைகள் தம்முள் ஒன்றை ஒன்று கொம்பால் முட்டித் தாக்கி, உடம்பில் குருதிக் கறையுடன், காலையில் தோன்றும் செவ்வான மேகங்கள் போலக் காணப் பட்டன.
அந்தக் காளைகளைக் பொதுவர் இரண்டு பிரிவுகளாக இனம் பிரித்தனர். இச்செயல் உலகைப் படைக்கும் பிரமன் நிலத்தையும் நீரையும் படைப்பது போல இருந்தது.
காளைகளையும், பசுக்களையும் இரு திறனாகப் பிரிக்கும் பொதுவரை அந்தக் காளைகள் கொம்பால் குத்தின. உழலைக் கட்டையைத் துளைக்குள் மாட்டுவது போல அவை அவர்களைக் குத்தின.
குத்திய காளைகளைக் குருதிப் புண்ணுடன் பொதுவர் அடக்கினர். கடலில் பரதவர் அம்பிப் படகில் செல்வது போல அவற்றின் மீது ஏறி அடக்கினர்.
காளைகளின் கொம்பில் தொங்கும் குடர்,
கன்று போட்ட பசுவின் நஞ்சுக் கொடியை ஆலமரத்தில் கட்டித் தொங்கவிடுவார்களே
அது போலத் தொங்கியது.
இப்படிக் காளைகளில் தம் நிலத்துக்கு உரியனவற்றைப் பிரித்து ஓட்டிக்கொண்டு வந்த பொதுவரில் தம் காதலரின் கை களைக் கோத்துக்கொண்டு ஆய்ச்சியர் இன்பமுடன் தழூஉக் கூத்து ஆடினர்.
திரும்பத் திரும்ப அணைத்துக்கொண்டு அவர் நெஞ்சில் புதைந்துகொள்வேன்.
காதலர் காளைகளால் பட்ட புண்ணுக்கு என் முலைகளால் ஒற்றடம் கொடுப்பேன்.
அவன்தான் என் கேள்வன் (கணவன்)
தயிர் கடையும்போது என் முலையில் தெரித்த துகள்களுடன் அவன் குருதி படிந்த தோளைத் தழுவுதல் எனக்கு ஒரு அணி கலன் அல்லவா? காதல் கேள்வனே கேள்.
காளைகளுடன் போரிட அஞ்சுதலும், ஆயர் மகளின் தோளைக் காமுறுதலும் ஒருவரால் செய்ய முடியுமா? இரண்டும் வெவ்வேறு முனைச் செயல்கள் அல்லவா?இவள் கணவன் கொல்லும் காளையை அடக்கிய வன் என்று ஊரார் சொல்வதைக் கேட்டுக்் கொண்டே நான் வெண்ணெய் விற்றுக்் கொண்டு வரவேண்டும். இந்தப் புகழ்ச் செல்வத்தை என் கேள்வன் தருவானா என ஏங்கினேன். தந்திருக்கிறான். இப்படிச் சொல்லிப் பாடிக்கொண்டு காதலரைப் பேணுவோம்.
அத்துடன் வண்டு மொய்க்கும் முல்லை நிலக் காட்டையும் பாடுவோம்.வீரம் மிக்க எம் அரசன் தன் தலைமைமையை ஏற்றவர் தரும் திறைச் செல்வத்தைப் பெறுவதற் காகப் பகைவரை வெல்ல வேண்டும் என்றும் பாடுவோம்.
பாடல் - 7
தோழி! இப்படி ஒரு செயல் நிகழ்ந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று தெரிய வில்லை. நீயாவது சொல். ஆடு மேய்க்கும் இடையர் நம் ஊருக்கு வந்தனர். அவர்களுக் கும், குடம் நிறையப் பால் கறக்கும் பசுக் களுக்கும் ஒரு குறை இருந்தது. நான் வளர்க்கும் கொல்லேறு எறு தழுவும் போருக் காகத் தொழுவில் விடப்படவில்லை என்பது அந்தக் குறை. அதனால் பசு மேய்க்கும் கோ இனத்து ஆயர் தன் காளைகளையும் சேர்த்து ஏறு தழுவலுக்காகத் தொழுவில் விட்டனர். அப்போது தொழுவத்தில் சுழன்ற என் காளை, சிறிதே தன் காதை மறைத்துத் தலையில் சூடியிருந்த ஒருவனின்மலையை தன் கொம்பில் மாட்டிச் சுழற்றுகையில் அதன் பூ ஒன்று வந்து என் கூந்தலில் விழுந்து விட்டது. அந்தப் பூவை நான் உள்ளே செருகி என் தலையை முடிந்து கொண்டேன். இது என் தாய்க்குத் தெரிந்து விட்டது பொல் தெரிகிறது என தலைவி கூறினாள்.
தாய் கேட்டால் என்ன செய்யலாம் என்கி றாய். அது உன் காதலன் சூடிய கண்ணிப் பூ அல்லவா? என தோழி கேட்டாள்.
நான் கூந்தலில் முடிந்துகொண்ட அந்தப் பூவைப் புதியவன் ஒருவனின் பூவை முடிந்துகொண்டாளே என்று தாய் கேட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாதே என தலைவி கூறினாள்.
" நம் எல்லாத் தவறும் நீங்கிவிடும்" என தோழி கூறினாள். " ஓ அப்படியும் ஒன்று நிகழுமா?" என தலைவி கேட்டாள்.
நீ ஆயர் மகள் ஆயின், அவன் ஆயர் மகன் ஆயின், அவன் உன்னை விரும்பினால், நீ அவனை விரும்பினால், அன்னை வருந்து வதற்கு இதில் என்ன இருக்கிறது? ஒன்று மில்லை. உன் நெஞ்சம் போல் தாய்நெஞ்சம் இருக்குமாயின் இதில் தவறு ஒன்றும் இல்லை அல்லவா? அம்மாடியோ! ஆயர் மகனையும் காதலிக்கிறாய். தாய்க்கும் அஞ்சுகிறாய். - என்றால் நீ அடைந்திருக்குப் காதல் நோய்க்கு மருந்து ஏது? என தோழி கேட்டாள்.
மருந்து இல்லை என்றால் நான் வருந்த மாட்டேனா? என தலைவி வருந்தினாள்.
வருந்தவேண்டாம். உன் கூந்தலில் அவன் பூ விழுந்தது எனக் கேட்டு "இவளுக்குத் தெய்வம் காட்டிய வழி" என்று எண்ணிக்கொண்டு உன் தாய் தந்தையரும், அண்ணன்மாரும் திருமணம் செய்துதர உறுதி பூண்டுள்ளனர். உன் விருப்பம் நிறைவேறும் என தோழி கூறினாள்.
பாடல் - 8
மாறுபட்ட வேந்தர் இருவரின் படை போரிட வந்திருப்பது போல, அகன்றிருக்கும் அல்குல், தோள், கண் ஆக்கியவற்றையும், குறுகியிருக்கும் நெற்றி, காலடி, இடை ஆகியவற்றுடன் அழகின் தெய்வமான காமனே தன் அம்பை விடும் அழகோடு அகன்ற தெருவில் வெண்ணெய் விற்பதற்காகச் சுழன்று சுழன்று நடந்து வருகிறாள். "சிரிக்கக்கூட முடியாதவனாக நான் இருக்கிறேன்" என்று எண்ணி என் உயிரை வாங்கத் உன் அழகு என்னும் வேலைப் பாய்ச்சிய நட்போ பகையோ இல்லாத இகலாட்டியே! இப்படி என் உயிரை வாங்குவதற்கு நான் என்ன பிழை செய்தேன்? 👉தலைவன்
அப்படி நான் உன்னைத் துன்புறுத்தவில் லை. நீ எம் இன ஆயன் ஆனால் நான் ஆய்த்தி (ஆய்ச்சி). நீ காயாம்பூ மாலையைத் தலையில் சூடியிருக்கிறாய். கருமையும் துவர் நிறமும் கொண்ட காவி நிற ஆடை அணிந்திருக்கிறாய். மேயும் மாடுகளுக்கு முன்கோலை ஊன்றிக் கொண்டு நின்கி றாய். நீ ஒரு ஆயன் அல்லவா? அல்லது வேறொருவனா? ஞாயிறு தெய்வம் பெற்றெடுத்து ஒளியுடன் திகழும் மகனாகத் தென்படுகிறாய். 👉தலைவி
நீ இப்படிச் சொல்வதால் என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லை. முல்லை மொட்டும், முல்லை அரும்பும் வரிசைப்படுத்தி வைத்தது போன்ற பற்களும், மூங்கில் போன்ற தோளும், என்னைத் தாக்கிப் போர் புரியும் கண்களும் கொண்டவளாய் இருந்துகொண்டு, என்னை நல்லழகன் என்று பாராட்டுபவளே! உன்னை எதிர்த்து யாராவது பேசமுடியுமா? 👉தலைவன்
அப்படிச் சொல்லாதே. மண்டு போல் பேசிக் குழந்தை போல் நடந்துகொள்கிறாய். என்னைக் கண்டவுடன் முன்பே தெரிந்தவர் போல் நான் விற்கும் வெண்ணேய் பற்றி வினவி, என் உறுப்புகளையும் பாராட்டி, தொட வருகிறாய். உன் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக் கிறாய்?
👉தலைவி
உன் நெஞ்சுக் களத்தை ஆள என்னால் எப்படி முடியும்? புனத்தில் இருக்கும் என் தந்தைக்கு சோறு கொண்டு செல்வாயா? பசு-இனத்தோடு இருக்கும் என் தந்தைக்குப் பால் கறக்கப் பாத்திரம் கொண்டு செல்வாழா? தினை வயல் பகுதியில் என் தாய் விட்டிருக்கும் கன்றுகளை மேய்ப்பாயா? , 👉தலைவி
அப்படியே ஆகட்டும். வெண்ணெய் கடையும் ஓசை கேட்கிறது. உன் ஊர் பக்கத்தில்தான் இருக்கிறது எனத் தெரிகிறது. நண்பகல் பொழுது ஆயின் யாரும் பார்க்கமாட்டார்கள். மயில் கழுத்துப் போல் அழகுடன் திகழும் மாயவளே! இந்த வெயிலில் ஏன் விரைந்து செல்கிறாய்? அங்கே பார். யானை தூங்குவது போன்ற பாறை உள்ளது. நுங்குத் தண்ணீர் போன்ற நீர் இருக்கும் சுனை உள்ளது. அதில் நீராடி, தளவம், முல்லை ஆகிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொண்டு, காயாம்பூ பூத்திருக்கும் குகுளு சோலையில் என்னோடு தங்கி யிருந்துவிட்டு வயில் தாழ்ந்ததும் உன் ஊருக்குத் திரும்பலாம். 👉தலைவன்
இப்போதே நான் போகவேண்டும். மாவடு போன்ற கண் கொண்ட சிறு ஆய்ச்சிப் பெண்கள் இருக்கிறார்கள். உன் ஏமாற்று வலையில் விழுந்து அவர்கள் ஏமாறுவார் கள். எந்தப் பசுவையும் வெறுக்காத காளை போல் இருக்கிறாய். நாள்தோறுப் பத்துப் பேரிடம் காமம் கொள்வாய். நீ ஒரு கண் குத்திக் கள்வன். நீ பிறருக்கு என்னதான் செய்யமாட்டாய்? நான் உனக்கு என்ன செய்ய முடியும்? 👉தலைவி
கொல்லும் கண், கூர்மையான பல், கொய்யும் தளிர் போன்ற மேனி, இப்படிப் பட்ட அழகினை உடைய மாயவள் நீ. உன்னைக் காட்டிலும் சிறந்தவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை நீ தெரிந்து கொள். நீ என்னுடன் வா. மலை போன்ற மார்பினைக் கொண்ட தெய்வம் திருமாலைத் தொட்டுச் சத்தியம் செய்கிறேன். 👉தலைவன்
இப்படியெல்லாம் ஒன்றும் தெரியாத வருக்குச் சொல். நீ பொய் சொல்லவில்லை என்றால், இனிமையே உருவான அரசனின் சிறுகுடியில் நாங்கள் வாழ்கிறோம். எம் ஆயர் வேந்தனுக்குத் தரவேண்டிய பொருள் களைத் தந்து கடமை ஆற்றிக்கொண்டு ஆரவாரத்துடன் இருப்பர். அப்போது உன் பெண்களுக்குத் தெரியாமல் இருக்க , காஞ்சிப் பூக்களின் தாது உதிர்ந்தது போல எரு நிறைந்திருக்கும் மன்றத்தில் குரை யாடும் பெண்களுக்குக் கேட்காவண்ணம் உன் ஆம்பல் குழலை ஊது. காஞ்சி மரத்துக்குக் கீழே நாம் கூடலாம். 👉தலைவி
பாடல் - 9
மண் மணக்கும்படிக் கார்மழை நிறைந்து பெய்து இடம் பெயராமல் மேயும் குடம் நிறையப் பால் கறக்கும் பசு இனத்தில் போரிடாமல் சென்ற காளையோடு போரிடும் பசு இளங்காளை இழுக்கும் தேரில் ஊர்ந்து செம்மாப்புடன் வருவது போல மதமதப்புடன் வருகிறாள்.
பேரூரும் சிற்றூரும் அழகைப் பாராட்டிப் பேசும்படி வருகிறாள். மோர் விற்றுக் கொண்டு வருகிறாள். இவள் அழகை யாரோடும் சொல்லிக்கொள்ளாமல் வருகிறாள்.
இவளது உறவுக்காரர்கள் தைத்ததுணியால் அழகுபடுத்தி மாலை அணிவிக்காமல் இருக்கும் அல்குல் கொண்ட இவள் மனத்தில் புண் இல்லாதவர் புண் படும்படிப் பார்க்கிறாள்.
இவன் மேனியெல்லாம் என் கண்ணைத் தின்னும் அழகு இவளுக்கு. இவள் ஒழுங்கில்லாத சும்மாட்டு கட்டி மோரைச் சுமந்து வருகிறாள். தோளை வீசிக் கொண்டு நடந்து வருகிறாள்.
கக்கத்திலே கூடை வைத்திருக்கிறாள். இவள் காதுகளில் உள்ள குழை ஆடுகிறது. கழுத்தைக் காட்டிலும் மெலிந்த இடையைப் பெற்றிருக்கிறாள்.
திருமகள், இரதி ஆகிய அழகுத் தெய்வங் கள் இருவரும் தாம் பெற்றிருக்கும் உடல ழகை இவளுக்குத் தந்தார்களோ?
இவள் மடைப்கள்ளிக்குப் பால் தரக் கோயிலுக்கு வருவாளாயின் காமக் கடவுள் காமன் தன் கணைகளைத் தொடுப்பான். இவள் பிறரை வருத்திக் காமநோய் உண்டாக்கவே வருகிறாள். காம நோய்க்கு மருந்து ஆகமாட்டாள்.
தன் சால்பினால் எல்லாரையும் வருத்து பவள். ஊரிலுள்ள பெண்கள் எல்லாரும் "நான் மோர்-மாங்காய் தின்னவேண்டும் (கருவுற்றிருக்கிறேன்) எங்குச் சென்றாலும் உன் சுற்றத்தாரோடு செல்க. (தனியே செல்ல வேண்டாம்)" என்று தம் தம் கணவரை வீட்டின் வாயிலை அடைத்துக் காப்பாற்றிக்கொள்ளும்படி வருகிறாள்.
பாடல் - 10
தலைவி கூறிகிறாள் - எல்லா! கட்டுக் காவல் மிகுந்திருக்கும் இந்த ஊரில் ஆடு மேய்க்கும் இடையர் குடிதோறும் இருக்கும் பெண்களையெல்லாம் விரும்புகிறாய். உன் ஆசை வலி உள்ளவர் மேல் தேளை விட்டுக் கொட்டச் செய்வதுபோல் உள்ளது. என்னைத் தொட நெருங்குகிறாய். சிரிக் கிறாய். என்னோடு திளைக்கலாம் என்று எண்ணுகிறாய். தயிர்விற்பவள் வெண்ணெ யாகவும் பயன்படுவாள் என்று எண்ணு கிறாய்.
தலைவன் கூறுகிறான் - ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே! அப்படு நீ சொன்னால் அது அப்படியே ஆகட்டும். நீ போய்விடு. அச்சத்தால் தானே செல்கிறாய்? அசைந்து அசைந்து நடந்து நாணத்தால் (நிச்சம்) தான் தடுமாறும் மென்மை உடைய ஆய்மகள் நீ. உன் மத்தைப் பிடித்துச்சுற்றிக்் கொண்டு திரும்பித் திரும்பிச் சுழலும் கயிறாக உன் அழகைச் சுற்றிக்கொண்டு என் நெஞ்சு சுழல்கின்றது. விடிந்து போன பின்னரும் இல்லத்துக்குச் செல்லாமல் தொழுவத்துக்குள் இருக்கும் கன்றுக் குட்டிக்காகச் சுழன்றுகொண்டிருக்கும் அடுத்துக் கருவுற்றிருக்கும் தாய்ப்பசு போல உன்னைக் கண்ட பிறகு நாள்தோறும் உன்னையே நினைத்துக்கொண்டு என் நெஞ்சு உன்னைச் சுழன்று வருகிறது. துன்பம் பெருகி வாடுகிறேன். நெய் கடையும் தயிரில் வெண்ணெய் தேடாமல், காயாத பாலில் கையைவிட்டு வெண்ணெய் தேடி கிடைக்காமல் வருந்துகிறேன். என் உயிர் வருந்தத் தக்கது.
தலைவி அம்மாடியோ! சான்றாண்மை மிக்க மகளாகிய என்னை ஊர் மன்றத்தில் கண்டு "நீ இல்லாமல் வரமாட்டேன்" என்றல்லாம் சொல்கிறாய். இங்கே நிற்கிறாய். நிற்காதே. சென்றுவிடு. எங்களவர் பார்த்துவிடப் போகிறார்கள். நாளை கன்றுகளை மேய்க்கக் காட்டுக்குச் செல்வேன். (அங்கே நீ வரலாம்)