சங்க இலக்கியம் - II அலகு - 3 நெடுநல் வாடை
நெடு நல் வாடை
👉தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல்.
👉இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
👉நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
வையகம் பனிப்ப,
வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம்புதுப்
பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய
கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இனநிரை
வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு
கலங்கிக் கோடல் நீடு இதழ்க் கண்ணி நீர்
அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும்பனி
நலிய, பலருடன்
கைக்கொள் கொள்ளியர்
கவுள்புடையூஉ நடுங்க (1 - 8)
கருத்துரை
🎫 வையகம் குளிருமாறு, வலமாகச் சூழ்ந்து (தவறாது மழையைத் தருகின்ற பொய்யாத வானம் புது மழையினைப் பொழிந்தது.
🎫அப்போது, மழை வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள இடையர், தம்முடைய காளை மாடுகளோடு பசு, எருமை ஆடு போன்ற நிரைக் கூட்டத்தையும் வேற்றிடத்திற்கு ஓட்டிச் சென்று மேயவிட்டனர்.
🎫 பழகிய இடத்திலிருந்து வேற்றிடத்திற்குச் சென்ற தால் ஏற்பட்ட தனிமைத்துயரில் கலங்கினர்.
🎫 தம் கழுத்தில் அணிந்துள்ள நீண்ட இதழ் களைக் கொண்ட செங்காந்தள் மலர் மாலை யில் இருந்து நீர்த்துளிகள் மேனியில் படுவ தால் வாட்டமுற்றனர்.
🎫 தம் மேனியின் குளிரி னைத் தணிக்கப் பலரும் கூடி கைகளை நெருப்பில் காட்டிச் சூடேற்றினர்.
🎫 இடையர் களின் கன்னங்கள் புடைத்து நடுங்குமாறு குளிரின் தன்மை இருந்தது.
கூதிர்க்காலத்தின் தன்மை
மாமேயல் மறப்ப,
மந்தி கூர
பறவை படிவன
வீழ, கறவை
கன்று கோள் ஒழியக்
கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன
கூதிர்ப் பானாள் (9 - 12)
கருத்துரை
🎫விலங்குகள் மேய்தலை மறந்தன.
🎫குரங்கு களின் உடல் குளிரால் கூனிப் போயின.
🎫 பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.
🎫 கன்றுகளுக்குப் பால் கொடுக்கும் மாடுகள் பால் குடிக்க வரும் கன்றுகளைத் தவிர்த்து கோபத்தோடு உதைத்துத் தள்ளின.
🎫 இவ்வாறாக குன்றையே குளிர்விப்பது போல் கூதிர் காலத்து நள்ளிரவு இருந்தது.
மழைக்காலச் செழிப்பு
புன் கொடி முசுண்டைப்
பொதிப்புற வான் பூ,
பொன் போல் பீரமொடு,
புதல் புதல் மலர,
பைங்காற் கொக்கின்
மென்பறைத் தொழுதி, இருங்களி பரந்த
ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு,
எவ்வாயும் கவர
கயல் அறல் எதிர,
கடும் புனல் சாஅய்
பெயல் உலந்து எழுந்த
பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில்
துவலை கற்ப; அங்கண் அகல்வயல்
ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின்
வருகதிர் வணங்க;
முழு முதல் கமுகின்
மணிஉறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த
குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள
வீங்கி, புடை திரண்டு. தெண் நீர்ப் பசுங்காய்,
சேறுகொள முற்ற;
நளிகொள் சிமைய
விரவுமலர், வியன் காக்
குளிர் கொள் சினைய
குரூஉத்துளி தூங்க (13 - 28)
கருத்துரை
🎫மென்மையான முசுண்டைக் கொடியின் பருத்த வெண்ணிறப் பூக்கள், பொன் போன்ற பீர்க்கம் பூக்களோடு புதர்கள் தோறும் மலர்ந்திருந்தன.
🎫 பசுங்கால்களை யும் மென்மையான சிறகினையும் கொண்ட கொக்கின் கூட்டங்கள், கருநிற வண்டல் மணல் பரவிக் கிடக்கும் ஈரமான வெண் மணலில் செவ்வரி படர்ந்த நாரைகளோடு நின்று கொண்டிருந்தன.
🎫 அவை மழைநீரின் பெருக்குத் தளர்ந்தவுடன் அந்நீரில் எதிர்த்து வரும் மீன்களை எந்தெந்த இடங்களி லிருந்து கவர முடியுமோ அங்கே நின்று கொண்டு கவர்ந்தன.
🎫 மழை நீங்கிய அகன்ற வானத்தில் எழுந்த வெண்மேகம் மழைத் துளிகளை மேலும் தூவுவதற்குக் கற்கும் விதமாகத் தூவிக் கொண்டேயிருந்தன.
🎫அகன்ற வயல்களில் நிறைவாக மழை பெய்ததினால், செழித்து வளர்ந்த வளப்ப மான தாளினையுடைய நெற்கதிர்கள் முற்றி வணங்கி நின்றன.
🎫 நன்கு செழித்து வளர்ந்த பருத்த பாக்கு மரத்தின் நீலமணி போன்ற கழுத்துப் பகுதியிலுள்ள மடல் களில் காய்ந்திருக்கும் பாக்குக் குலைகளின் உள்ளிருக்கும் நீர் வற்றி பருத்தும், பசுமையான காய் இனிமையான காய்களாக முற்றின.
🎫மலை உச்சியில் பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன.
தெருக்களில் சுற்றித்திரியும் மக்கள்
மாடம் ஓங்கிய
மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல்
நெடுந் தெருவில்
படலைக் கண்ணி, பரு ஏர்
எறுழ் திணிதோள்,
முடலை யாக்கை,
முழுவலி மாக்கள்
வண்டு மூசு தேறல்
மாந்தி, மகிழ் சிறந்து,
துவலைத் தண் துளி
பேணார், பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர்,
வேண்டுவயின் திரிதர (29 - 35)
கருத்துரை
🎫மாடங்கள் உயர்ந்து விளங்கும் வளமை யான மூதூர், அங்கே ஆறு கிடப்பது போல் அகன்ற நீண்ட தெருக்கள்.
🎫 அத் தெருக்களில் தழை மாலை அணிந்து.
🎫 பருத்து அழகுடன் விளங்கும் திண்ணிய தோள்களும் முறுக்குண்ட உடம்பும் உடைய ராய், உடல் வலிமை முழுதும் வாய்க்கப் பெற்ற மக்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளினை அதிகமாகக் குடித்து, மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியோடு குளிர்ந்த மழைத் துளி தம் மேனியில் விழுவதையும் பொருட் படுத்தாதவராய் பகல் பொழுது கழிந்த பிறகும், இரு பக்கமும் (முன்னும் பின்னு மாக) தொங்குகின்ற ஆடையோடு விரும் பிய இடங்களெல்லாம் சுற்றித் திரிந்தனர்.
🎫மாலையில் தெய்வத்தை வழிபடும்
பெண் கள்
வெள்ளி வள்ளி வீங்கு
இறைப் பணைத் தோள்,
மெத்தென் சாயல்,
முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து
எழில் மழைக்கண்,
மடவரல் மகளிர்
பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின்
பைங்கால் பித்திகத்து, அவ்இதழ் அவிழ் பதம்
கமழ, பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின்
ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும்
தூஉய், கை தொழுது,
மல்லல் ஆவணம்
மாலை அயர (36 - 44)
கருத்துரை
🎫வெண்மையான சங்கினால் செய்யப்பட்ட வளையல், இறுகின முன்கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிலே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச் சியான கண்களையுடையர், பெண்மைக் குரிய பேதைமைத் தன்மை யுடையர்,
🎫இப் பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் பருவத்தில் இருந்த பசுமையான காம்பினை யுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின.
🎫அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர்,
🎫இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும்தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர்.
🎫இவ்வாறு, வளமான அங்காடித் தெருவில் மாலைக் காலத்தைக் கொண்டாடினர் பெண்கள்.
கூதிர்க்கால நிகழ்வுகள்
மனைவாழ் புறாவின் நிலை
மனை உறை புறவின்
செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு
மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும்
மயங்கி, கையற்று,
மதலைப் பள்ளி
மாறுவன இருப்ப,
அரைக்கப்படாத சந்தனமும்
அரைக்கப்பட்ட கத்தூரியும்
கடியுடை வியல் நகர்ச்
சிறுகுறுந் தொழுவர்,
கொள் உறழ் நறுங்கல்,
பல கூட்டு மறுக,
வடவர் தந்த
வான் கேழ் வட்டம்
தென்புல மருங்கில்
சாந்தொடு துறப்ப (45 - 52)
கருத்துரை
🎫வீட்டில் வாழும சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தான் இன்புறும் பெண் புறாக்களோடு, பொது இடங்களுக்குச் சென்று தமது இரையை ஆராய்ந்து எடுத்து உண்ணாமல் இருந்தன.
🎫 இரவு எது பகல் எது என்று அறிய முடியாது மயங்கிச் செய லிழந்து கொடுங்கையைத் தாங்கும் பலகை யில் நின்றன.
🎫 ஒரே இடத்தில் நிற்பதால் ஏற்பட்ட கால் வலியைப் போக்கக் காலை மாற்றி மாற்றி வைத்தன.
🎫காவலையுடைய அகன்ற வீடுகளில் குற்றேவல் செய்வோர், கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணம் மிக்க கல்லில் (உடலுக்கு வெப்பத்தைத் தரும்) கத்தூரி முதலிய நறுமணப் பொருட்களை அரைத்தனர்.
🎫 வடநாட்டினர் தந்த வெண் ணிற வட்ட வடிவ சந்தனம் அரைக்கும் கற்களில், தென்திசையிலிருந்து கிடைத்த சந்தனக் கட்டைகள் அரைக்கப்படாமல் கிடந்தன.
மகளிர் நிலை
கூந்தல், மகளிர்
கோதை புனையார் ,
பல் இருங் கூந்தல்
சில்மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி
நெருப்பு அமைத்து,
இருங்காழ் அகிலொடு
வெள் அயிர் புகைப்ப, (53 - 56)
கருத்துரை
🎫மகளிர் தம் கூந்தலில் பூமாலைகளைச் சூடார், அடர்ந்த கரிய கூந்தலில் சிலவாகிய மலர்களையே சூடினர்.
🎫 குளிர்ச்சியைத் தரும் வாசனை மரத்தின் விறகில் நெருப்பை உண்டாக்கி, கரிய மர வைரமாகிய அகிலொடு, வெண்மையான அயிரையும் சேர்த்துப் புகைத்தனர்.
இயங்காத விசிறியும்,
தாழிட்ட சாளரமும்
கைவல் கம்மியன்
கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டம்
சுருக்கி; கொடுந்தறி
சிலம்பி வால் நூல்
வலந்தன தூங்க;
வான் உற நிவந்த
மேல் நிலை மருங்கின், வேனில் பள்ளித்
தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை
திரியாது, திண் நிலைப்
போர் வாய்க் கதவம்
தாழொடு துறப்ப; (57 - 63)
கருத்துரை
🎫கைவேலைப்பாட்டிலே சிறந்து விளங்கும் தொழிலாளி அழகுபெற உருவாக்கிய, சிவந்த நிறத்தையுடைய விசிறி (ஆல வட்டம்) ஒடுக்கப்படும், சிலந்தியின் வெண்மையான நூல் பின்னப்பட்ட நிலையிலே வளைந்த ஆணியில் தொங்கின.
🎫வானத்தைத் தீண்டுமாறு உயர்ந்த மேல் மாடத்தில், தென்றல் காற்று நேராக வருகின்ற, இளவேனிற் காலத்து உறங்கும் படுக்கையறையிலுள்ள பலகணியில் உலவுதலைத் தவிர்த்தனர்.
🎫 பலகணியின் வலிமையான நன்கு பொருந்துகின்ற கதவுகளும் தாழிட்டுக் கிடந்தன
வெறுக்கப்படும் தண்ணீர்;
விரும்பப்படும் நெருப்பு
கல்லென் துவலை
தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல்
தண்ணீர் உண்ணார்,
பகுவாய்த் தடவில்
செந் நெருப்பு ஆர (64 - 66)
கருத்துரை
🎫கல்லென்ற ஓசையோடு, சிறு தூறலாக மழைத்துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயினையுடைய குடத்திலுள்ள குளிர்ந்த நீரைப் பருகவில்லை;
🎫அகன்ற வாயினையுடைய தூபமூட்டியில் நெருப்பின் வெம்மையைப் பெரிதும் துய்த்தனர்.
தண்மையின் திரிந்த
யாழின் தன்மையை
வெம்முலையால்
சரி செய்தல்
ஆடல் மகளிர்
பாடல்கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த
இன்குரல் தீம் தொடை,
கொம்மை வருமுலை
வெம்மையில் தடைஇ,
கருங் கோட்டுச் சீறியாழ்
பண்ணுமுறை நிறுப்ப; (67 - 70)
கருத்துரை
🎫ஆடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர், பாடலை வாசிப்பதற்காக யாழினைப் பொருந்துமாறு செய்தனர்.
🎫 குளிர்ச்சியால் மாறுபட்ட இனிய குரலினை எழுப்பும் இனிய நரம்பினைத் திரட்சியான முலையின் (மார்பகத்தில்) வெப்பத்தில் தடவி, கரிய தண்டினை இசைப்பதற்கு ஏற்ற வகையில் முறைப்படுத்தி நிறுத்தினர்.
காதலர் பிரிந்தோரை
வாட்டும் கூதிர்
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,
பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால். (71 - 72)
கருத்துரை
🎫கணவரைப் பிரிந்த மகளிர் (கார்காலம் வந்தும் கணவர் வராமை எண்ணி) தனியே வருந்த, மழை மிகுதியாகி பனிக்காற்றும் நில்லாது நிலைபெற்றிருந்தது.
மன்னனின் அரண்மனையை உருவாக்கிய முறை
விரிகதிர் பரப்பிய
வியல்வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை
வழுக்காது குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா
அரைநாள் அமையத்து, நூல் அறி புலவர்
நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு,
தெய்வம் நோக்கி,
பெரும்பெயர் மன்னர்க்கு
ஒப்ப மனைவகுத்து (72 - 78)
கருத்துரை
🎫சூரியன், திசை எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தினையுடையது.
🎫 அச்சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் (இது சித்திரை மாதம் பத்தாம் நாளுக்கு மேல் இருபதாம் நாளுக்குள் நிகழும் என்பர்) கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை.
வாயில்ஒருங்கு உடன் வளைஇ
ஓங்குநிலை வரைப்பின்
பரு இரும்பு பிணித்து,
செவ்வரக்கு உரீஇ துணைமாண் கதவம் பொருத்தி,
இணை மாண்டு,
நாளொடு பெயரிய கோள்
அமை விழு மரத்து,
போது அவிழ் குவளைப்
புதுப்பிடி கால் அமைத்து,
தாழொடு குயின்ற,
போர்அமை புணர்ப்பின்,
கைவல் கம்மியன்
முடுக்கலின், புரைதீர்ந்து, ஐயவி அப்பிய
நெய்அணி நெடு நிலை,
வென்று எழு கொடியொடு
வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன
ஓங்குநிலை வாயில், (79 - 88)
கருத்துரை
🎫அரண்மனையின் அனைத்தப் பகுதிகளை யும் ஒரு சேர வளைத்து, உயர்ந்த நிலை யினையுடைய (வாயில்நிலை) மதிலை அமைத்தனர்.
🎫 அம்மதிலின் நிலையோடு பருத்த இரும்பால் இணைக்கப்பட்ட செம்மையான அரக்கு வண்ணம் பூசிய இரண்டாக அமைந்துள்ள சிறந்த கதவுகளைப் பொருத்தினர்.
🎫 அவை நிலையோடு இணைந்து இடைவெளி இன்றி நன்கு விளங்கின. மதிலின் கதவுகள், உத்திரம் என்ற விண்மீனின் (நாள் மீன்) பெயரைக் கொண்ட வலிமை பொருந்திய சிறந்த மரத்தால் செய்யப்பட் டிருந்தன.
🎫 அக்கதவுகளில் அலரும் பருவத்து குவளை மலரின் அரும்பு இதழ் விரித்ததைப் போன்ற அமைப்புடன் புதுமை தோன்ற செய்யப்பட்ட கைப்பிடிகளை நன்கு பொருந்துமாறு பதித்திருந்தனர்.
🎫 இரண்டாக அமைந்திருந்த கதவுகள் கைத்தொழில் வல்ல தச்சன் நெருக்கியதால் உளி இடைவெளி இன்றி அமைந்திருந்தன.
🎫வாயிலின் உயர்ந்த நிலையில் வெண்சிறு கடுகினை அரைத்துப் பூசி நெய் தடவியிருந்தனர்.
🎫 வெற்றிக் கொடியினைத் தாங்கி வரும் யானைகள் அரண்மனைக்குள் நுழையும் வண்ணம் மலைக்குள் நுழைவது போல உயர்ந்த நிலைகளையுடையதாய் அரண்மனையின் வாயில் அமைந்திருந்தது.
🎫அரண்மனையின் முற்றத்தில் புது மணல் பரப்பப்பட்டிருந்தது. இம்முற்றம் திருமகள் நிலைபெற்று விளங்கும் தன்மையினை உடையது. குற்றமற்ற சிறப்பினைப் பெற்றது, செல்வம் நிறைந்தது.
🎫அரண்மனை வாயிலின் முன்பகுதி, நீண்ட மயிரினையுடைய கவரிமானின் வெண் நிறத்தையுடைய ஏறு, குறுகிய கால்களையுடைய அன்னத்தோடுத் தாவித் திரியும் அழகினைப் பெற்றது.
அரண்மனையில் எழும் ஓசைகள்
பணைநிலை முனைஇய
பல்உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும்
புலம்புவிடு குரலொடு,
நிலவுப் பயன் கொள்ளும்
நெடுவெண் முற்றத்து,
கிம்புரிப் பகுவாய்
அம்பணம் நிறைய,
கலிந்து வீழ் அருவிப்
பாடுவிறந்து, அயல
ஒலி நெடும் பீலிஒல்க,
மெல் இயல்
கலி மயில் அகவும்
வயிர் மருள் இன்இசை,
நளி மலைச் சிலம்பின்
சிலம்பும் கோயில் (93 - 100)
கருத்துரை
🎫பந்தியிலே (குதிரைகளைக் கட்டுமிடம்) நிற்பதற்கு வெறுத்த, பலவாகிய பிடரி மயிரினையுடைய குதிரை, புல்லுணவுத் தெவிட்டத் தனிமைத் துயரோடு குரலினை எழுப்பியது.
🎫அரசன் நிலவின் பயனைத் துய்க்கும் நீண்ட நிலா முற்றத்தில், மகர மீனின் (சுறா மீனின்) வாய் போன்று பிளந்த வாயினையுடைய நீர் விழும் குழாயிலிருந்து நீர் விழுகின்ற ஓசை, அருவி விழும் ஓசை போல மிகுதியாக இருந்தது.
🎫 அதன் அருகிலோ, தழைத்த நீண்ட தோகை அசைய மென்மைத் தன்மையும் செருக்குமுடைய மயில்கள், ஊது கொம்பின் இசையோ? என்றும் மருளும் வண்ணம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
🎫 இவ்வாறு அரண்மனையில் எழுந்த பல்வேறு ஆரவார ஓசைகளும் செறிந்த மலையிலிருந்து எழும் ஆரவாரம் போல் இருந்தது.
அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய
வினை மாண் பாவை
கை ஏந்தும் ஐ அகல்
நிறைய நெய் சொரிந்து,
பரூஉத்திரி கொளீஇய
குரூஉத்தலை நிமிர் எரி,
அறுஅறு காலை தோறு,
அமைவரப் பண்ணி,
பல்வேறு பள்ளிதொறும்
பாய்இருள் நீங்க; பீடு கெழு சிறப்பின்
பெருந்தகை அல்லது,
ஆடவர் குறுகா
அருங்கடி வரைப்பின் (101 - 107)
கருத்துரை
🎫யவனர்களால் உருவாக்கப் பெற்ற, சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்கும் பாவையின் கையில் ஏந்தியிருக்கின்ற கை விளக்கில் (அகலில்) அகல் நிறையுமாறு நெய்யினை ஊற்றினர்;
🎫பருத்த திரிகளைக் கொளுத்தினர்; பொன்நிறத் தலையோடு மேல்நோக்கி எரியும் விளக்கில், நெய் குறையும் பொழுதெல்லாம், நெய் வார்த்துத் திரியைத் தூண்டி நன்கு எரியுமாறு செய்தனர்.
🎫இப்பாவை விளக்கின் ஒளி, அரண்மனையின் பல இடங்களிலும் பரவி இருந்த இருளினை நீங்கச் செய்தது.
🎫 இத்தகு அந்தப்புரம், பெருமை பொருந்திய சிறப்பான மன்னனையல்லாது, வேறு ஆடவர் செல்ல முடியாத அரிய காவலையுடையது; குறிப்பிட்ட எல்லை உடையது.
யவனர்
சங்க நூல்களிலே பலவிடத்தும் யவனரைப் பற்றிய செய்திகளைப் பரக்கக் காணலாம்.
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலந்து ஏந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப (புறம். 56; 18 - 20
இப்பாடல்கள் வழி, மதுவினை யவனர்கள் தமிழகத்தில் இறக்குமதி செய்துள்ளனர் என்பதும் பொன்னைக் கொடுத்துத் தமிழகத்திலிருந்து மிளகினை வாங்கிச் சென்றுள்ளமையும் அறிய முடிகிறது.
காவிரிப்பூம்பட்டினத்து அரண்மனை தோட்டத்துள் அமைந்த மண்டபத்தை, மகத வினைஞரும் மாராட்டக் கம்மரும்அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும்தண்டிடமிழ் வினைஞர் தம்மொடு கூடீ(மணிமேகலை. காதை 19. பரி. 107 - 09)
என்கிறது மணிமேகலை. கி.பி. 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படும் பெருங்கதையிலும் யவனரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. யவனர் நகைகள் செய்துள்ளனர்.
யவன மஞ்சிகை (1.31; 76)
அழகிய பாவை விளக்கினைச் செய்துள்ளனர்.
யவனப்பாவை அணி விளக்கு (1.17; 175)
மகர வீணையைப் புனைந்துள்ளனர்
யவனக் கைவினை
மாணப் புணர்தோர் மகர வீணை (3.16; 22 - 23)
யவனப் பேழை (3.22. 213) என்று கூறுதலால் அழகிய பேழைகளையும் வனைந்துள்ளனர் யவனர் என்பது அறியலாகிறது.
யவனர் கைவினை (1.38. 233)
என்பதால் கையால் வேலைப்பாடமைய கலைப் பொருட்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கினர் யவனர் என்பது தெளிவாகிறது.
*“கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ரோமைக் கைப்பற்றிய அலரிக் என்பவன் மூவாயிரம் பவுண்டு நிறையுள்ள மிளகைக் கைப்பற்றினான் என்பது அறியப்படுதலால், தமிழக வாணிகம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலும் ரோமப் பெருநாட்டுடன் தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பது தெரிகிறது.”
அந்தபுரத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
வரை கண்டன்ன தோன்றல,
வரை சேர்பு,
வில் கிடந்தன்ன
கொடிய, பல்வயின்,
வெள்ளி அன்ன
விளங்கும் சுதை உரீஇ, மணி கண்டன்ன
மாத்திரள் திண்காழ்,
செம்பு இயன்றன்ன
செய்வு உறு நெடுஞ்சுவர்,
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ,
கருவொடு பெயரிய
காண்புஇன் நல்இல் (108 - 114)
கருத்துரை
🎫அந்தப்புரம், மலைகளைப் பார்ப்பது போன்ற உயர்ந்த தோற்றமுடையதாய் விளங்கியது. அங்கு மலைகளைச் சேர்ந்து வானவில் கிடப்பது போன்று பல நிறக்கொடிகளும் அசைந்தன.
🎫அந்தபுரத்தின் பல இடங்களில் வெள்ளி போன்ற சாந்தினைப் பூசி இருந்தனர்.
🎫நீலமணியைக் காண்பது போன்ற கரிய திரண்ட வலிமையான தூண்களும் காணப்பட்டன.
🎫 செம்பினால் உருவாக்கப்பட்டது போன்று செய்யப்பட்ட நெடிய சுவரிலே, பல வடிவத்தினாலான பூக்களும் ஒரு கொடியைச் சுற்றி இருத்தல் போன்ற காட்சியும் தீட்டப்பட்டிருந்தது.
🎫இவ்வாறு காண்பதற்கு இனிய நல்ல இல்லமாகக் கரு தங்கும் அறை (கரு அறை) என்று பெயர் பெற்ற அந்தபுரம் காட்சியளித்தது.
தலைவி படுத்திருக்கும் பாண்டில் எனும்
வட்டக் கட்டில்
தச நான்கு எய்திய
பணைமருள் நோன்தாள், இகல் மீக்கூறும்,
ஏந்து எழில் வரிநுதல்,
பொருது ஒழி, நாகம் ஒழி
எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும்
ஒப்ப, வல்லோன்
கூர் உளிக் குயின்ற,
ஈர்இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர்
வீங்குமுலை கடுப்ப புரைதிரண்டிருந்த குடத்த,
இடை திரண்டு,
உள்ளி நோன் முதல்
பொருந்தி அடி அமைத்து,
பேர் அளவு எய்திய
பெரும் பெயர்ப் பாண்டில் (115 - 123)
கருத்துரை
🎫நாற்பது ஆண்டுகள் நிரம்பப் பெற்றதும், முரசு என்று வியந்து நோக்கும்படியான வலிமையான கால்களும், போரில் சிறந்த யானை என்று புகழப்பட்ட தகுதியும், மிக்க அழகும, வரிகளையுடைய நெற்றியும் பெற்ற போரில் இறந்த யானையின், தாமே வீழ்ந்த தந்தங்களைக் குறைத்துச் சீர்படுத்தி, அழகும் செம்மையும் பொருந்தி விளங்குமாறு, தொழில் வல்ல தச்சனால் கூர்மையான உளிக் கொண்டு செய்த இரண்டு இலை வடிவம் இடையே விளங்குமாறு உருவாக்கப்பட்டிருந்தது தலைவியின் கட்டில்.
🎫சூல் முதிர்ந்த அசைந்த இயல்பினையுடைய பெண்களின் பருத்த முலை (மார்பு) போன்று, பக்கங்களில் திரண்டிருக்கும் குடத்தை உடையதாய் கட்டிலுக்கும் காலுக்கும் இடைப்பட்ட பகுதி இயற்றப்பட்டிருந்தது.
🎫பூண்டின் வலிமையான முதற்பகுதி போன்று, கட்டிலினுடைய காலின் அடிப்பகுதிப் பொருத்தமுடன் விளங்க, அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்ட பெரும் பெயர் பெற்ற ‘பாண்டில்’ எனும் வட்டக் கட்டில் அமைந்திருந்தது.
கட்டிலில் செய்யப்பட்டுள்ள ஒப்பனை
மடைமாண் நுண்இழை
பொலிய, தொடைமாண்டு,
முத்துடைச் சாலேகம்
நாற்றி, குத்துறுத்து, புலிப் பொறிக் கொண்ட
பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக்
கொளீஇ, துகள் தீர்ந்து,
ஊட்டுறு பல்மயிர்
விரைஇ, வயமான்
வேட்டம் பொறித்து,
வியன் கட் கானத்து
முல்லைப் பல்போது
உறழப் பூ நிரைத்து, மெல்லிதின் விரிந்த
சேக்கை மேம்பட,
துணை புணர் அன்னத்
தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப்
பாய், அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு
கலிங்கத்துத்
தோடு அமை தூமடி
விரிந்த சேக்கை, (124 - 135)
கருத்துரை
🎫மூட்டுவாய் நன்கு பொருந்த கட்டிலோடு சேர்த்துக் கட்டப்பட்ட முத்து மாலைகளை, நுண்ணிய நூலால் அழகாகத் தொடுத்து கட்டிலினைச் சுற்றிச் சாளரம் போன்று தொங்க விட்டிருந்தனர்.
🎫 புலியின் வரியினை ஒத்த நிறமுடைய பூக்கள் நிறைந்த தாம்பாளத்தைப் (தட்டு) போன்று குத்துதல் தொழில் அமைய வடிவமைக்கப்பட்டிருந்த தகடுகளால், கட்டிலின் மேலிடம் மறையுமாறு அமைத்திருந்தனர்.
🎫குற்றமற்ற பல்நிறம் ஊட்டப்பட்ட மயிர்க்கற்றைகள் விரவி உருவாக்கிய கட்டிலின் விரிப்பில் சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவினைப் பொறித்திருந்தனர்.
🎫 அதன் மீது அகன்ற காட்டிலே மலரும் முல்லையோடு பல்வேறு மலர்களையும் இடையே சேர்த்துப் பரப்பிய மென்மையான போர்வையை விரித்திருந்தனர்.
🎫இப்படுக்கைச் சிறப்புற காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையான சிறகினை இட்டுச் செய்த, இரண்டாக இருக்கின்ற மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பினர்.
🎫 அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர்.
🎫 மலரின் இதழ்கள் போன்று அமைந்த கஞ்சியிடப்பட்டுத் துவைத்து மடித்த ஆடையினைப் படுக்கையின் மீது விரித்திருந்தனர்.
படுக்கையில் இருந்த தலைவியின் நிலை
ஆரம் தாங்கிய அலர்
முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ்
தாழ, துணை துறந்து,
நல்நுதல் உலறிய
சில்மெல் ஓதி,
நெடுநீர் வார்குழை
களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய,
வறிது வீழ் காதின், பொலந்தொடி தின்ற
மயிர் வார் முன்கை,
வலம்புரி வளையொடு
கடிகைநூல்யாத்து,
வாளைப் பகுவாய்
கடுப்ப வணக்குறுத்து,
செவ்விரல் கொளீஇய
செங்கேழ் விளக்கத்து,
பூந்துகில் மரீஇய
ஏந்துகோட்டு அல்குல், அம்மாசு ஊர்ந்த
அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம்
கடுப்ப, புனைவு இல் (136 - 147)
கருத்துரை
🎫போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, முத்து மாலையைத் தாங்கிய பெருத்த முலையினைக் கொண்ட மார்பிலே, பின்புறம் அமைந்த நீண்ட கூந்தல் தாழ்ந்து கிடக்க நல்ல நெற்றியில் வறண்ட சில மெல்லிய மயிர்ப் புரள கட்டிலில் இருந்தாள்.
🎫 நீண்டு தொங்கும் நுண்ணிய குழையினைக் (காதணி) களைந்துவிட்டு, குழையின்றி தாழ்ந்து தொங்கும் இயல்பினையுடைய காதின் சிறு துளைகளில் தாளுருவி என்னும் சிறிய காதணியை அழுத்தியிட்டிருந்தாள்.
🎫பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த மயிர் ஒழுங்குபட அமைந்த முன் கைகயில் வலம்புரிச் சங்கால் செய்த வளையலை அணிந்திருந்ததோடு, காப்பு நூலும் கட்டியிருந்தாள்.
🎫 வாளை மீனின் பிளந்த வாயை ஒத்து விளங்கிய வளைந்த மோதிரத்தை (நெளி என்னும் மோதிரம்) அணிந்த சிவந்த விரலில், செந்நிறமுடைய (சிறிய) மோதிரத்தைச் செருகியிருந்தாள்.
🎫 பூ வேலைப்பாடு அமைய உருவாக்கப்பட்ட பட்டாடை உடுத்தியிருந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில் மாசு படிந்த அழகிய நூலால் நெய்யப்பட்ட ஆடையினை உடுத்தியிருந்தாள்.
🎫 இவ்வாறு, வண்ணங்களைக் கொண்டு ஒப்பனை செய்யாத ஓவியத்தைப் போன்று தலைவி, ஒப்பனை ஏதுமின்றி கட்டிலில் இருந்தாள்.
தலைவியின் அடி வருடும் தோழியர்
தளிர் ஏர் மேனி,
தாய சுணங்கின்,
அம் பணைத் தடைஇய
மென் தோள், முகிழ் முலை,
வம்பு விசித்து யாத்த,
வாங்கு சாய் நுசுப்பின்,
மெல் இயல் மகளிர்
நல் அடி வருட; (148 - 151)
கருத்துரை
🎫தலைவியின் நல்ல பாதங்களை வருடி நிற்கும் பெண்கள், தளிர் போன்ற அழகிய மேனி உடையர்; அவ்வுடம்பில் தேமலைப் பெற்றிருப்பவர்;
🎫மூங்கில் போன்ற தோளினை உடையவர், 🎫தாமரை மொட்டு போன்ற முலையினைக் கச்சினால் இறுகக் கட்டி பிணைத்திருப்பவர்,
🎫வளைந்து, தளர்ந்த இடையினையும், மென்மையான இயல்பினையும் உடையர்.
தேற்றும் செவிலியர்
நரை விராவுற்ற
நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர்
கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும்
உரை பல பயிற்றி,
‘இன்னே வருகுவர்
இன் துணையோர் ’ என
உகத்தவை மொழியவும்…. (152 - 156)
கருத்துரை
🎫தலைவனைப் பிரிந்திருக்கும் தவைவிக்குப் பிரிவாற்றாமை மிகுவதை அறிந்து, நரை கலந்திருக்கும் மணம் வீசும் மெலிய கூந்தலையும் சிவந்த முகத்தையும் உடைய செவிலியர் (தோழியின் தாயர்) ஒன்று கூடினர்.
🎫தலைவியின் பிரிவாற்றாமையைத் தணிக்கும் வகையில் குறைவாகப் பேச வேண்டிய இடத்தில் குறைத்தும், விளக்கமாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நீட்டித்தும் அறிவுரைகள் பல கூறினர்,
🎫பிரிவுத் துயரம் தணிய முற்சித்தனர்; உனக்கு இனிய துணையாக அமைந்த தலைவன், ‘இப்பொழுதே வருவார்’ என்று தலைவியின் மனம் விரும்பும் வகையில் கூறினர்.
தேறாத் தலைவி
நுண் சேறு வழித்த
நோன்நிலைத் திரள் கால்,
ஊறா வறு முலை
கொளீஇய, கால் திருத்தி,
புதுவது இயன்ற
மெழுகு செய் படமிசை,
திண் நிலை மருப்பின்
ஆடு தலையாக, விண் ஊர்பு திரிதரும்
வீங்கு செலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின்
செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள்
நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய
மலிந்து வீழ் அரிப்பனி,
செவ்விரல் கடைக்கண்
சேர்த்தி, சில தெறியா,
புலம்பொடு வதியும்…….. (156 - 166)
கருத்துரை
🎫தலைவியியோ, செவிலியரின் சொற்களைக் கேட்டும் மனம் அமைதியடையாமல் மிகவும் கலங்கினாள். 🎫தலைவி அமர்ந்திருந்த கட்டிலின் நுண்ணியதாகச் சாதிலிங்கம் பூசிய வலிமையான பருத்த கால்கள், பால் சுரக்காத முலை (பெண்ணின் மார்பு) போன்று சிறிய குடங்களைக் கொண்டு விளங்கின.
🎫 அத்தகைய கால்களைக் கட்டிலின் மேற்பகுதியோடு இணைத்து நன்கு அமைத்திருந்தனர்.
🎫 புதிதாக உருவாக்கிய மெழுகு பூசிய கட்டிலின் மேல் விதானத்தில் திரைச் சீலையினைக் கட்டியிருந்தனர்.
🎫 அதில் வலிமை வாய்ந்த கொம்புகளையுடைய ஆட்டின் பெயருடைய மேட இராசி முதலாக ஏனைய இராசிகளிலும் வானில் திரிகின்றவனாகிய ஞாயிற்றிலிருந்து மாறுபட்ட சிறப்பினையுடைய திங்களோடு என்றும் பிரியாது நிலைபெற்று விளங்கும் உரோகிணி எனும் நாள்மீனின் சித்திரம் வரையப்பட்டிருந்தது.
🎫அதனைக் கண்ட தலைவி, தானும் உரோகிணி போன்று கணவரைப் பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று பெருமூச்சுவிட்டாள். 🎫அவளின் குவளை மலர் போலும் இமைகளில் தங்கிய கண்ணீர் மிகுந்து விழ, அதனைத் தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி, சில துளி கண்ணீரை விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி, சில துளி கண்ணீரை விரலால் தெறித்துத் தனிமைத் துயரில் வருந்தினாள்.
தலைவியின் துயர் தீர தெய்வத்தை வேண்டல்
இன்னா அரும்படர் தீர,
விறல் தந்து
இன்னே முடிக தில்
அம்ம (166 - 168)
கருத்துரை
அன்பு மிகுந்த கலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில், தலைவனுக்குப் போரில் வெற்றியைத் தந்து, இப்பொழுதே முடித்துத் தருக, எம் விருப்பத்தைக் கேட்பாயாக என்று வெற்றியைத் தரும் கொற்றவையை வேண்டினர்.
அரசனின் நிலை
ஓடையொடு பொலிந்த
வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை
நில மிசைப் புரள, களிறு களம் படுத்த
பெருஞ்செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப்புண்
காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி
எறிதொறும் நுடங்கி,
தெற்கு ஏர்பு இறைஞ்சிய
தலைய, நன் பல
பாண்டில் விளக்கில்,
பரூஉச் சுடர் அழல, வேம்புதலை யாத்த
நோன்காழ் எஃகமொடு,
முன்னோன் முறைமுறை
காட்ட, பின்னர், (168 - 177)
கருத்துரை
🎫ஒளி வீசும் முகபடாம் விளங்கும் போர்த் தொழில் பழகிய யானையின் நீண்ட திரண்ட கை, நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச்செயலைச் செய்தவர் மறவர்.
🎫 அவ்வீரர்கள், போரிலே வாளினால் பட்ட விழுப்புண்களைக் காண்பதற்றகாகப் பாசறையிலிருந்து வெளியே சென்றான் தலைவன்.
🎫 அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளின் பருத்த தலைகள் வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும்பொழுதெல்லாம், அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்தன.
🎫 அவ்வொளியில் வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய வலிய காம்பினையுடைய வேலினை ஏந்தியாவாறு முன்னே சென்றான் வீரனொருவன்.
🎫 அவன், தலைவனுக்குப் புண்பட்ட வீரர்களை ஒழுங்கு முறைப்படிக் காட்டிச் சென்றான். பின்பு,
மணி புறத்து இட்ட
மாத்தாட் பிடியொடு,
பருமம் களையாப்
பாய்பரிக் கலிமா
இருஞ் சேற்றுத் தெருவின்
எறிதுளி விதிர்ப்ப,
புடைவீழ் அம்துகில்
இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த
வன்கண் காளை
கவல் மிசை அமைத்த
கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த
மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ,
தா துளி மறைப்ப, நள்ளென் யாமத்தும்
பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும்
வேந்தன்
பலரொடு முரணிய
பாசறைத் தொழிலே. (178 - 188)
கருத்துரை
🎫பாசறையின் கரிய சேறுடைய தெருவில், மணிகளைப் புறத்தே இட்ட பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு, சேணம் களையாத பாய்ந்து செல்லும் செருக்குடைய குதிரைகளும் தன்மேல் விழுந்த மழைத் துளிகளைச் சிதறின.
🎫தலைவன் தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான்.
🎫 தனது வலது கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வலிமையான வீரனின் தோளின் மேலே வைத்துக் கொண்டு, போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மலர நோக்கினான்.
🎫 இவ்வாறு வீரர்களைப் பார்த்த வரும்மன்னன் மேல் மழைத்துளி படாதவாறு, நூலால் கோர்க்கப்பட்ட முத்துமாலைகள் தொங்கும் வெண் கொற்றக் குடை தவ்வென்ற ஓசையோடு அசைந்து தாவும் மழைத்துளிகளை மறைத்து நின்றது.
🎫 நள்ளென்ற இரவுப் பொழுதிலும் துயில் கொள்ளாது, சில வீரர்களோடு புண்பட்ட வீரர்களைப் பார்த்து வரும் மன்னர், பல பகை மன்னர்களோடு மாறுபட்டு பாசறையிலே தங்கியுள்ள இப்போர்த் தொழில் (யாதாக வேண்டும் என்ற வினை எழும்புகிறது; விடை சொல்கிறார் நக்கீரர் 167 மற்றும் 168 வரிகளில்) ‘விறல் தந்து இன்னே முடிகதில் அம்ம’ என்று முன்னதில் இருந்து முடிவினை பெற வைக்கிறார் ஆசிரியர்.