தொல்காப்பியம் - பொருளதிகாரம் அலகு - 1 அகத்திணையியல் Q/A
தொல்காப்பியம் - பொருளதிகாரம்
அலகு - 1
அகத்திணையியல்
[ 2 marks ]
1. இன்ப ஒழுக்கத்தின் வகைகள் யாவை?
"கைக்கிளை முதலாப் பெருந்திணை
இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப "
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுதியாக ஏழு திணைகள் முன்பு பகுக்கப்பட்டது. அவை முறையே கைக்கிளை , குறிஞ்சி , முல்லை ,மருதம் , நெய்தல் , பாலை , பெருந்திணை ஆகியன ஆகும். இவையே அகத்திணைகள் ஆகும். இவற்றை இன்ப ஒழுக்கத்தின் வகைகள் என்றும் கூறலாம்.
________________
2. ' நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்' - விளக்குக.
அகத்திணைகள் ஏழு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐந்திணைகள் என்றழைக்கப்படுவன குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகியன ஆகும். இந்த ஐந்து திணைகளில் பாலைத்திணை என்பது பொதுவானதாகும். இந்தப் பாலை திணை நீங்கலாக ஏனைய நான்கு திணைகளுக்கும் தான் இந்த உலகம் பகுக்கப்பட்டுள்ளது.
________________
3. ஐந்திணைக்கு உரிய பொருள்கள் யாவை?
"முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறை சிறந்தனவே"
பாடலுள் பயின்றவை நாடும் காலை
முதற்பொருள் உரிப்பொருள் கருப்பொருள் ஆகிய மூன்றும் அகத்திணைக்குரிய பொருள்களாகும். இவை பாடலுள் வரும்போது ஒன்றை விட ஒன்று சிறந்ததாகவே அமையும்.
________________
4. ' உரிப்பொருள் அல்லன மயங்கவும்
பெறுமே ' - விளக்குக.
உரிப்பொருள் அல்லாதவை கருப்பொருளும் முதற்பொருளும் ஆகும். இவை தனக்குரிய நிலம் மட்டும் அல்லாது பிற நிலங்களிலும் மயங்கி ( கலந்து ) வருவதும் உண்டு.
________________
5. ' கலந்த பொழுதும் காட்சியும் அன்ன ' - விளக்குக.
தலைவியை கண்டவிடத்து தலைவனுக்கு மனமகிழ்ச்சி ஏற்படுவதும் தலைவியை எதிரிட்டு தலைவன் காணுதலும் உரிப்பொருளின் ஒரு வகை ஆகும்.
________________
6. ' முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே ' - விளக்குக.
முதல் பொருள் என்பது மேலே கூறப்பட்ட நிலமும் காலமும் என்னும் இரண்டும் ஆகும்.
________________
7. ' முந்நீர் வழக்கம் மகடூஉ ஓடு இல்லை ' - விளக்குக.
தலைவன் பிரியும் இடத்து தலைவியையும் உடன் அழைத்துக் கொண்டு கடல் கடந்து செல்வது என்பது கிடையாது. மகடூஉ என்பதன் பொருள் பெண். இலக்கண முறைப்படி மகடூஉ என்பது முன்னிலை பெயர்ச்சொல் ஆகும்.
________________
8. ' அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே ' - விளக்குக.
சேரி இடத்தும் , சுரத்து இடத்தும் தலைவன் தலைவியை பிரிதல் உண்டு. இப்பிரிவு மட்டுமல்லாது தன் வீட்டில் இருந்து நீங்கி இடத்திற்குச் சென்றாலும் அதுவும் பிரிவு என்றே கொள்ளப்படும்.
________________
9. ' எஞ்சியோர்க்கு எஞ்சுதல் இலவே ' - விளக்குக.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் படி நற்றாய் , செவிலி , கண்டோர் , தோழி ,தலைமகன் ஆகியோர் கூற்றுக்கு உரியோர் எனக் கூறப்பட்டது. கூறாது ஒழிந்த தலைவி , பாங்கன் , பார்ப்பார் , பாணர் , கூத்தர் ,உழையோர் முதலியோரும் கூற்றுக்கு உரியோர் ஆவார்.
________________
10. ' ஏனை உவமம் தானுணர் வகைத்தே ' - விளக்குக.
உள்ளுறை உவமத்தை தவிர ஏனைய உவமைகள் யாவும் படித்ததும் தானே பொருள் விளங்கும் வகையினதாக இருக்கும்.
________________
11. ' முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப ' - விளக்குக.
இதற்கு முன்னர் உள்ள நூற்பாவில் கூறப்பட்டது போல ஏராமடல் திறம் , இளமைத் தீராத்திறம் , தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் , மிக்க காமத்துடன் மாறாகதிறம் ஆகிய நான்கும் பெருந்திணைக்கு முன்னதாக கூறப்பட்ட கைக்கிளை உரியன ஆகும்.
________________
12. அகத்திணைப் பாடல்களுக்கு உரிய பாவகை யாது?
கலிப்பா மற்றும் பரிபாடல் ஆகிய இரு பா வகைகளும் அகத்திணைப் பாடல்களுக்கு உரியதாகும் என்று புலவர்கள் கூறுவதாக தொல்காப்பியர் கூறுகின்றார்.
________________
13. இயற் பெயர் வராத இடங்கள் யாவை?
"மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் "
மக்களின் அக ஒழுக்கமானது ஐந்திணை இடத்தும் வரையறுத்து கூறப்படும். இருப்பினும் அவற்றுள் புணர்தல் முதலிய ஒழுக்கத்தின் தலைப்பட்டார் பொது பெயராலே கூறுவர். அன்றி இயற்பெயர் அவ்விடங்களில் கூறப்படாது.
________________
14. இயற் பெயர் வரும் இடங்கள் யாவை?
" புறத்திணை மருங்கின் பொருந்தின அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே"
ஒருவரின் இயற்பெயரை சுட்டி கூறுதல் என்பது புறத்திணையில் வரப்பெறும். அகத்திணையில் இயற்பெயரை சுட்டி கூறுதல் இல்லை.